எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று குணம் ஆனது.. பரிசோதனையில் கொரோனா தொற்று நெகடிவ் என உறுதி..
திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா தொற்று அறிகுறி, காய்ச்சல் இருப்பதாகக் கூறிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தார். அடுத்த 2 நாளில் அவரது உடல்நிலை மோசமானது. அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவி உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்த சூழலில் அமெரிக்க டாக்டர்களுடன் ஆலோசித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் திரையுலகினர் பாரதி ராஜா, இளையராஜா, ரஜினிகாந்த், சிவகுமார், நடிகை சரோஜாதேவி, சரத்குமார், ராதிகா, விஜய், சூர்யா. கார்த்தி என ஒட்டு மொத்தமாக நட்சத்திரங்களும் ஆர்.கே.செல்வ மணி தலைமையில் பெப்ஸி தொழிலாளர்களும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை மற்றும் கூட்டுப் பிரார்த்தனை பலன் அளித்துள்ளது. எஸ்.பி.பிக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்குத் தொற்று இல்லை என்று தெரியவந்தது. அதை எஸ்.பி.பி. மகன் சரண் உறுதிப்படுத்தினார்.
அவர் கூறும்போது. எனது தந்தை எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது. நலமுடன் உள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று நெகடிவ் எனத் தெரிய வந்தது. எனது தந்தைக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்தும், கூட்டுப் பிரார்த்தனை செய்ததற்கும் நன்றி எனக் கூறி உள்ளார் எஸ்.பி.பி சரண்.