தமிழுக்கு வரும் இரண்டு பிரபல மலையாள இயக்குனர்கள்

மலையாள சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களாக இருப்பவர்கள் அன்வர் ரஷீத் மற்றும் மிதுன் மேனுவல் தாமஸ். 2005ல் மம்மூட்டியை நாயகனாக வைத்து 'ராஜமாணிக்கம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை அன்வர் ரஷீத் இயக்கினார். முதல் படமே இவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் பின்னர் மலையாள சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன. இதன்பிறகு மோகன்லாலுடன் 'சோட்டா மும்பை', மீண்டும் மம்மூட்டியை வைத்து 'அண்ணன் தம்பி' மற்றும் 'கேரளா கஃபே' 'உஸ்தாத் ஹோட்டல்' உள்படப் பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய 'பெங்களூர் டேஸ்', 'பிரேமம்', 'பறவா', 'டிரான்ஸ்'ஆகிய படங்களைத் தயாரித்தும் உள்ளார். இதேபோல மலையாள சினிமாவில் கதாசிரியராக நுழைந்தவர் மிதுன் மேனுவல் தாமஸ். 'ஓம் சாந்தி ஓசானா', 'ஆடு', 'ஆடு 2', 'அலமாரா', 'ஆன் மரியா கலிப்பிலானு' உட்படப் பல படங்களுக்கு இவர் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த வருடம் இவர் திரைக்கதை எழுதி இயக்கிய 'அஞ்சாம் பாதிரா' என்ற படம் பெரும் பரபரப்பாக ஓடியது. கிரைம் திரில்லரான இந்தப் படம் பெரும் வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில் இந்த இரண்டு சூப்பர் ஹிட் மலையாள இயக்குநர்களும் தமிழுக்கு வருகின்றனர். மிதுன் மானுவல் தாமஸ் திரைக்கதை எழுதும் இந்த படத்தை அன்வர் ரஷீத் டைரக்ட் செய்கிறார். இந்தப் படத்தில் கார்த்தி நடித்த 'கைதி' யில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் வந்த அர்ஜுன் தாஸ் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த தகவலை மிதுன் தன்னுடைய பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More News >>