இளம் வயதில் நீரிழிவு நோய் ஏற்பட காரணம் என்ன? - மருத்துவர் விளக்கம்
இளம் வயதில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு மரபணுவே காரணம் என்று டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு நோய் சிறப்பு மைய தலைவர் டாக்டர். ஏ.மோகன் கூறினார்.
தனிநபர்களின் மரபணுவை கண்டுபிடித்து அதற்கு ஏற்ற முறையில் சிகிச்சை அளிக்கக்கூடிய துல்லிய நீரிழிவு சிகிச்சையை (பிரெசிஷன்) சென்னை கோபாலபுரத்தில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு நோய் சிகிச்சை மையம் தொடங்கியுள்ளது. இதனை தென்னிந்தியாவுக்கான பிரிட்டிஷ் துணைத்தூதர் பரத்ஜோஷி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய டாக்டர். ஏ. மோகன், “நீரிழிவு நோய் என்பது, உடல் ஆரோக்கியத்தில் ஒரு சிக்கலான நிலை ஆகும். இதில் அறிகுறிகள் ஆளுக்கு ஆள் மாறுபடும் மற்றும் அவ்வாறே நோயை கண்டறியும் பரிசோதனையும் மாறுபடும். நீரிழிவு நோய்களில் குறைந்தபட்சம் 20 வகைகள் உள்ளன.
நோயாளியை துல்லியமாக வகை பிரித்து, அவர் எந்த வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை தீர்மானித்து, அதற்கேற்ப அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதே பிரெசிஷன். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோய்க்கும் இளைஞர்கள் பலர் இளவயதிலேயே நீரிழிவு நோயால் தாக்கப்படுவதற்கும் மரபணுவே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “பல நோயாளிகளுக்கு ஒன்றாம் வகை நீரிழிவு நோய் இருப்பதாக தவறாக கருதப்பட்டு அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் இஞ்ஜெக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நீரிழிவின் வகை சரியாக கண்டுபிடிக்கப்பட்டதால் இன்சுலின் மருந்திலிருந்து அவர்கள் வாய்வழி சல்போனிலூரியா மருந்துக்கு மாற்றப்பட்டு, இப்போது நன்றாக இருக்கிறார்கள். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு ஆகக்கூடிய செலவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார்.