ராகுல்காந்தி விளக்கம்.. கோபம் தணிந்த கபில்சிபல்.. ட்வீட்டை நீக்கினார்..
ராகுல்காந்தி விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து கபில்சிபல் தனது ட்விட்டை நீக்கினார். தனது கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார்.காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம்நபி ஆசாத், சசிதரூர், பூபிந்தர்சிங்ஹூடா, மிலிந்த் தியோரா, மணீஷ்திவாரி, குரியன் உள்பட 23 பேர் இணைந்து கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில் சோனியா பதவி விலகி, நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். இதில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விமர்சிப்பது போல் சாராம்சம் இருந்ததால், மூத்த தலைவர்கள் பலரும் அதற்குக் கடுமையாகப் பதிலளித்து ஒரு பதில் கடிதம் அனுப்பினர்.
இந்த சூழலில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம், இன்று(ஆக.24) காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. சோனியா காந்தி தலைமை வகித்தார். இதையடுத்து, சோனியாவின் அறிக்கையை பொதுச் செயலாளர் வேணுகோபால் வாசித்தார். அதில், இடைக்காலத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், உடனடியாக புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான பணிகளைக் கட்சியின் செயற்குழு தொடங்க வேண்டும் என்றும் சோனியா கூறியிருந்தார். இதையடுத்து, மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் சோனியாவே தலைவராக நீடிக்க வேண்டுமென்றனர். அகமது படேல், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்படச் சிலர் சோனியாவுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
மேலும், ராகுல்காந்தி பேசும் போது, மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி நடந்து கொண்டிருந்த போது, மூத்த தலைவர்கள் இப்படியொரு பிரச்சனையை எழுப்பியது ஏன்? பாஜகவுடன் அவர்கள் ரகசியமாக உடன்பாடு வைத்துக் கொண்டு காங்கிரசைப் பலவீனப்படுத்துகிறார்களா? என்று கேள்வி எழுப்பியதாகச் செய்தி வெளியானது.
கூட்டத்தில் பங்கேற்காத கபில்சிபல், இந்த செய்தியைப் படித்ததும் கோபமடைந்தார். உடனே தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவை ஆதரித்து நான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. மணிப்பூரில் பாஜக அரசை வீழ்த்துவதற்கு நீதிமன்றத்தில் வாதாடியிருக்கிறேன். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்ற ஐகோர்ட்டில் வாதாடி வெற்றி பெற்றிருக்கிறேன். ஆனாலும், நான் பாஜகவுடன் ரகசிய கூட்டு வைத்துள்ளதாகச் சொல்வதா? என்று பதிவு வெளியிட்டார்.இதற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. ஒரு பதில் ட்வீட் போட்டார். அதில், ராகுல்காந்தி அப்படி எந்த கருத்தையும் சொல்லவில்லை. நீங்கள்(கபில்சிபல்) தவறான செய்தியின் அடிப்படையில் பதிவிட்டுள்ளீர்கள். மூத்த தலைவரான நீங்கள் இப்படிச் செய்யலாமா? என்று கூறியிருந்தார். அதே போல், ரன்தீப்சுர்ஜிவாலாவும் அதே போல் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும், ராகுல்காந்தியும் கபில்சிபலுக்குத் தொடர்பு கொண்டு, தாம் அப்படியே பேசவே இல்லை என்றும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்றும் கூறினார். இதையடுத்து, கபில் சிபல் தனது ட்விட்டை நீக்கினார். தன்னிடம் ராகுல்காந்தியே விளக்கம் கொடுத்ததையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.