மாணவியின் படிப்புச் செலவுக்கு 22 லட்சம் கொடுத்த பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் குறித்துத் தெரியாதவர் அதிகமாக யாரும் இருக்க முடியாது. உலகப் பிரசித்தி பெற்ற இந்த பாடகி பாடுவதோடு மட்டுமில்லாமல் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் ஏராளமான உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விட்டோரியா மாரியோ என்ற மாணவி, தனது கல்விச் செலவுக்கு உதவுமாறு கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு தகவலைப் பதிவு செய்திருந்தார்.

அதில், இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் உயர்நிலைப் படிப்பு படிக்க விரும்புவதாகவும், அதற்கு ₹39 லட்சம் வரை செலவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தனக்கு அந்த அளவுக்குப் பணம் இல்லாததால் தனது ஆசை கனவாகி விடுமோ என அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். விட்டோரியா குறித்த இந்த தகவல் பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்டுக்கு தெரியவந்தது. உடனடியாக விட்டோரியாவை தொடர்பு கொண்ட டெய்லர் ஸ்விஃப்ட், அவரது படிப்பு செலவுக்கு ₹22 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்தார்.

இதுகுறித்து விட்டோரியா தனது பேஸ்புக்கில் கூறியது: இவ்வளவு பெரிய தொகையை எனக்கு டெய்லர் தருவார் என என்னால் நம்பவே முடியவில்லை. இது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. டெய்லரைப் போல ஒரு உலகப் பிரசித்தி பெற்ற பாடகிக்கு எனது சொந்த கதை தெரிந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனது கல்விக்குத் தேவையான தொகை முழுவதும் இப்போது கிடைத்து விட்டது. ஆனாலும் டெய்லர் நன்கொடை அளித்தது குறித்து அறிந்த பலர் இப்போதும் எனக்கு உதவிகளை அளித்து வருகின்றனர். நான் கண்டிப்பாக பெரும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

More News >>