கிராமத்து அம்மன் கோவிலில் நடந்த மெட்ரோ பட நடிகர் திருமணம்..
கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் நட்சத்திரங்களின் திருமணம் நடந்துக் கொண்டிருக்கிறது. தெலுங்கு நடிகர் நிதின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்தது. கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு திருமணத்தை வெளி நாட்டில் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டார். ஆனால் லாக்டவுன் முடிவது போல் தெரியவில்லை. 5 மாதம் பொறுத்தவர் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று கடந்த மாதம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தனது திருமணத்தை நடத்தி முடித்தார்.
அதேபோல் நடிகர் ராணாவும் கொரோனா கால கட்டத்திலேயே தனது காதலி மிஹீகாவை சமீபத்தில் மணந்தார். மேலும் சில நட்சத்திரங்களின் திருமணமும் சமீபத்தில் நடந்தது. தமிழ் நடிகர் சத்யா திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. யமுனா படத்தில் கதாநாயகனாகவும் மெட்ரோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர் நடிகர் சத்யா. இவரது திருமணம் இன்று காலை கரூர்- ஈரோடு மார்க்கத்தில் புன்னம் கிராமத்தில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் இனிதே நடைபெற்றது.
கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடை பெற்றது.எளிய முறையில் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் மணமகன் சத்யா , மணமகள் சுருதி கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். விரைவில் திருமண வரவேற்பைச் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.மேலும் சத்யா நடித்து முடித்துள்ள புதிய படம் கொரோனா நாட்கள் முடிந்த பிறகு வெளிவர உள்ளது.