வாட்ஸ்அப்: பாதுகாப்பாய் பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் (Whatsapp) செயலியைத் திறந்தால் நேரம் போவதே தெரியாது. பலரது இரவு உறக்கம் தொலைந்து போவதற்கு வாட்ஸ்அப் முக்கிய காரணம். எங்குச் சென்றாலும் புகைப்படம் எடுத்து, ஸ்டேட்டஸை நிரப்பி வைப்பது சிலரது வழக்கம். வாட்ஸ்அப் புரொபைல் (profile) படத்தை மாற்றுவது பலருக்குப் பொழுதுபோக்கு. சிலருக்கு வாட்ஸ் அப்பை திறந்தாலே அரிசி மூடை கிழிந்ததுபோல் செய்திகள் வந்து கொட்டும். ஏதேதோ குழுக்களில் (groups) யார் யாரோ அனுப்பிய பதிவுகளும் வரும். வாட்ஸ்அப் செயலியில் பல விஷயங்களை நாம் கட்டுப்படுத்தலாம். அவற்றைத் தெரிந்து கொண்டால் வாட்ஸ்அப்பால் ஏற்படக்கூடிய தொல்லைகளைத் தவிர்க்கலாம்; நம்மைப் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் மற்றவர்கள் கைக்குக் கிடைக்காமல் பாதுகாக்கலாம்.

வாட்ஸ்அப் profile புகைப்படத்தைப் பாதுகாக்க

இந்தியாவில் நம்முடைய மொபைல் எண்ணை வைத்திருக்கும் எவரும் வாட்ஸ்அப் எண்ணில் நாம் வைத்திருக்கும் புகைப்படத்தைப் பார்க்கலாம். தேவையற்றவர்கள் நம் profile படத்தைப் பார்ப்பதைத் தவிர்க்க ஒரு வழி இருக்கிறது. வாட்ஸ் அப் செயலியின் About பிரிவில் Everybody, My Contacts மற்றும் Nobody என்ற தெரிவுகள் இருக்கும். அதில் யாரெல்லாம் நம் படத்தைப் பார்க்கலாம் என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

நாம் எங்குச் செல்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை வாட்ஸ்அப் நிலை தகவல் என்னும் ஸ்டேட்டஸ் மூலம் பலருக்கு அறிவித்து விடுகிறோம். அது பாதுகாப்பானது அல்ல என்பதோடு பல்வேறு சங்கடங்களையும் ஏற்படுத்தக்கூடும். Settings பிரிவில் நிலை தகவலை யார் பார்க்கலாம் என்பதை Everybody, My Contacts மற்றும் Nobody என்று கொடுக்கப்பட்டிருக்கும் வசதி மூலம் தெரிவு செய்து கொள்ளலாம்.

குழுக்கள்

நம் மொபைல் இருக்கும் யார் வேண்டுமானாலும் நம்மை எந்த வாட்ஸ்அப் குழுவிலும் (group) சேர்க்க முடியும். நமக்கு அவசியமில்லாத குழுக்களில் நம்மை சேர்த்து நாம் அவற்றிலிருந்து விலகும் தர்மசங்கடத்தைத் தவிர்ப்பதற்கு Group privacy settings என்ற பிரிவில் யார், யார் நம்மைக் குழுக்களில் சேர்க்கலாம் என்று அனுமதி வழங்கலாம். மற்றவர்கள் நமக்கு அழைப்பு அனுப்பலாமே தவிர அவர்களாக வாட்ஸ்அப் குரூப்களில் சேர்க்க இயலாது.

கடைசியாகப் பார்த்த நேரம்

"இப்போதுதான் வாட்ஸ்அப் பார்த்திருந்தீர்கள்... அதனால் கூப்பிட்டேன்," என்று சொல்லி அலைபேசியில் அழைப்பதைச் சிலர் இடைஞ்சலாக உணர்வார்கள். நீங்கள் வாட்ஸ்அப் எப்போது பார்த்துள்ளீர்கள் (Last seen) என்பதை மற்றவர்கள் அறிந்திடாத வண்ணம் Settings பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள வசதியைப் பயன்படுத்தி யாரும் பார்க்காதவண்ணம் அல்லது தொடர்பு பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கும்வண்ணம் மாற்றியமைக்கலாம்.

பயோமெட்ரிக் பூட்டு

மற்றவர்கள் உங்கள் வாட்ஸ்அப் அரட்டையை பார்க்காத வண்ணம் அதை lock செய்யலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளமாக இருந்தால் விரல் ரேகையை (Fingerprint) பயன்படுத்தியும், ஐபோனாக இருந்தால் முகமறி (Face ID) அல்லது தொடு உணர் (Touch ID) வசதியைப் பயன்படுத்தியும் மற்றவர்கள் பார்ப்பதைத் தடுக்கலாம்.

யார் வாட்ஸ்அப் அனுப்பக்கூடாது?

நமக்குத் தெரிந்த சில எண்களிலிருந்து வாட்ஸ்அப் தகவல் வருவதை, அந்த எண்ணுக்குரியோர் நம் புரொபைல் தகவலைப் பார்ப்பதைத் தடுக்க வேண்டியதிருந்தால் Settings பிரிவு அல்லது தனிப்பட்ட அரட்டை (individual chats) பிரிவில் உள்ள வசதிகள் மூலம் அந்த எண்களை block செய்து தடுக்கலாம்.

More News >>