கொரோனாவுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி, இத்தாலியில் தேசிய தினமாக மார்ச் 18 தேர்வு
மற்ற நாடுகளைப் போலவே இத்தாலியிலும் கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தங்களது நாட்டை கொரோனா இந்த அளவு பாதிக்கும் என இத்தாலியைச் சேர்ந்தவர்கள் யாரும் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை. இதையடுத்து கொரோனா பாதித்து இறந்தவர்களின் நினைவாக ஒரு தேசிய தினத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து ஒரு நாளை தேசிய தினமாகக் கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. எந்த தேதியைத் தேர்வு செய்யலாம் என ஆலோசித்த போது மார்ச் 18ம் தேதி தான் அனைவருக்கும் நினைவு வந்தது. அன்றுதான் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் உடல்கள் அடங்கிய 70 சவப்பெட்டிகளை இத்தாலியில் உள்ள பர்காமோ பகுதியில் இருந்து 30 ராணுவ வாகனங்களில் வரிசையாக பல்வேறு கல்லறைகளுக்கு அடக்கம் செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டது. இந்தக் காட்சி யாருடைய மனதைவிட்டு இன்றும் நீங்கவில்லை. அப்போது தான் கொரோனாவின் கோரத்தாண்டவம் உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரியவந்தது. அந்த நாளையே கொரோனாவால் பலியானவர்களுக்கான தேசிய நாளாக கடைப்பிடிக்க இத்தாலி தீர்மானித்துள்ளது.