குர்ஆன் போர்வையில் தங்கம் கடத்தல்.... கேரள அமைச்சர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..

திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தால் கேரள அரசு கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதற்கிடையே கேரள உயர் கல்வித்துறை அமைச்சரான ஜலீல், தூதரகம் வழியாக ஏராளமான பார்சல்களை கேரளாவுக்குக் கொண்டு வந்ததாகத் தகவல் வெளியானது. இந்த பார்சல்கள் தூதரகத்தில் இருந்து அரசு வாகனங்கள் மூலம் மலப்புரம் மாவட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து அமைச்சர் ஜலீலிடம் கேட்டபோது, துபாயிலிருந்து தூதரக பார்சல் மூலம் கொண்டு வரப்பட்டது புனித குர்ஆன் நூல்கள் என்று கூறினார். அந்த குரான் நூல்களை ஐக்கிய அரபு அமீரகம் இலவசமாக அனுப்பி வைத்தது என்றும் அவர் கூறினார். இதற்கிடையே தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் அலுவலகத்திற்குத் தொடர்பு இருப்பதால் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் இன்று கேரள சட்டசபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கேரள அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன.

இதில் கேரள ஜனபக்ஷம் கட்சித் தலைவர் ஜார்ஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், குர்ஆன் என்ற போர்வையில் துபாயிலிருந்து அமைச்சர் ஜலீல் கொண்டு வந்தது முழுக்க முழுக்க தங்கக்கட்டிகள் ஆகும். ஆனால் குர்ஆன் மட்டும் தான் பார்சலில் இருந்ததாக அமைச்சர் ஜலீல் பொய் சொல்கிறார். இது தொடர்பாக விரைவில் அவர் மீது நடவடிக்கை வரும். இவ்வாறு அவர் கூறினார். கேரள அமைச்சர் தங்கம் கடத்தியதாக அம்மாநிலச் சட்டசபையில் உறுப்பினர் ஒருவரே கூறியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>