`சிலை கரையும்முன் மகள் கைகளில் புகைப்படமானது! -சர்ச்சைக்கு உதயநிதி கொடுத்த நீண்ட விளக்கம்
கொரோனா பீதியால் நாடு முழுக்க அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்திக்குத் தமிழக அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் பலர் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர், தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தனர். ஆனால், கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திமுக மட்டும் எப்போதும் போல விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே, கந்தசஷ்டி கவசம் போன்ற விஷயங்களில் இந்து விரோத கட்சியாக விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று முதலே திமுகவை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இரவு ஒரு மண் பிள்ளையாரின் படத்தை மட்டும் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். விநாயகர் சிலையை வைத்திருப்பது யார், எதற்காக இந்த பதிவு போன்ற தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் இந்த டுவீட், இணையத்தில் விவாதமாகியது. ஒருபுறம் அதிமுக தரப்பு இதனை திமுகவுக்கு எதிரான பிரச்சாரமாக முன்னெடுக்க, இன்னொரு புறம் கலைஞர் டிவியில் வேலை பார்த்து வரும் பெண் செய்தியாளர் ஒருவர், உதயநிதியின் டுவீட்டை டேக் செய்து, `இது ஒரு தேவையில்லாத ஆணி' என்று பதிவிட்டார்.
இந்த வார்த்தைகளை அப்படியே இப்போது நெட்டிசன்கள் உதய்க்கு எதிராக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பெரியார் விநாயகர் சிலையை உடைத்த நிலையில் பெரியார் வழியில் வந்த உதய நிதி இப்படி விநாயகர் சிலையை ஷேர் செய்தது குறித்துக் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இதற்கிடையே, விநாயகர் சிலையைப் பதிவிட்டது குறித்து நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் உதயநிதி. ``மத்திய பாசிச பாஜக மற்றும் மாநில அடிமை எடுபிடி அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் குறித்து நான் பகிரும் போது அவற்றை எடுத்து விவாதித்து பேசுபொருளாக்காதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்ததை பரபரப்பாக விவாதிக்கிறார்கள்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாகக் கயிறு திரிப்பதைப் பார்க்கையில், இங்கு எது நடந்தாலும் அதனைக் கழகத்துக்கு எதிரானதாகத் திசைத்திருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதி வேலைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இரு விஷயத்தை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என் தாயாருக்குக் கடவுள் நம்பிக்கை உள்ளதை அனைவரும் அறிவர். எங்கள் வீட்டில் பூஜை அறையும் உண்டு அதில் எங்கள் மூதாதையர் உருவப் படங்களும், என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் இருக்கின்றன. முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்துவிட்டுச் செய்வது எங்கள் வழக்கம்.
பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தால் அந்த சிலையை நேற்று இரவு பார்த்த என் மகள் இந்த சிலையை எப்படிச் செய்வார்கள் என்று கேட்டார். இந்த சிலை களிமண்ணில் செய்தது. தண்ணீரில் கரைக்க எடுத்துச் சென்று விடுவார்கள் என்று இந்த சிலையை எதற்குத் தண்ணீரில் போடணும் என்று கேட்டார். அதுதான் முறை என்கிறார்கள் அடுத்தவர் சொத்துக்குப் புதிதாக வேறு என்று வாங்குவார்கள் என்று அழைப்பதற்கு முன் இந்த சிலை இதன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டார் அவரின் விருப்பத்தின் பேரில் நான் தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மகள் ரசித்த அந்த சிலையை அவர் அவரின் டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன். சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்ட விநாயகர் சிலை கரையும்முன் மகள் விருப்பத்தின் பேரில் அவர் கைகளில் புகைப்படமானது. அவ்வளவே" என்று பதிவிட்டுள்ளார்.