கேரள அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய சம்பவத்தில் முதல்வர் பினராயி் விஜயனின் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது. இதையடுத்து முதல்வர் பினராயி் விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தில் கேரள அரசின் மீது காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன. காங்கிரஸ் உறுப்பினர் சதீசன் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் காரசாரமாக விவாதம் நடத்தினர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசு மீது ஊழல் புகார்களைச் சுமத்தினர். ஆனால் ஆளுங்கட்சியினர் தங்கள் அரசின் சாதனைகள் குறித்து விவரித்தனர். பின்னர் மாலை 5.30 மணியளவில் முதல்வர் பினராயி விஜயன் பேசத் தொடங்கினார். சுமார் மூன்றே முக்கால் மணி நேரம் பேசிய அவர் இரவு 9.20 மணியளவில் தான் பேச்சை முடித்தார். இதையடுத்து முதல்வரின் பேச்சு நீண்டு செல்வதாகவும், தங்களது குற்றச்சாட்டுகள் குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்குச் சென்று கூச்சலில் ஈடுபட்டனர்.

ஆனாலும் பினராயி விஜயன் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தார். அவர் பேசி முடித்த பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 87க்கு 40 என்ற கணக்கில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதத்தை 5 மணி நேரத்தில் முடிக்க வேண்டுமென்று ஏற்கனவே முதல்வர் பினராயி விஜயன் உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் நேற்று இந்த தீர்மானத்தின் மீது பத்தரை மணிநேரத்திற்கும் அதிகமாக விவாதம் நடந்தது. முதல்வர் பினராயி விஜயன் மட்டுமே மூன்றே முக்கால் மணி நேரத்திற்கும் அதிகமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

More News >>