பல்வலி: மருத்துவரை பார்க்கும் முன்பு என்ன செய்யலாம்?

'தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்' என்று ஒரு பழமொழி உண்டு. பல்வலியால் ஒருவர் அவதிப்படாவிட்டால் அது எவ்வளவு தீவிரமானது என்பதை அறிந்து கொள்ள முடியாது. பல்வலி வந்தால் எதையும் சாப்பிட முடியாது. எந்த வேலையிலும் முழு கவனத்தைச் செலுத்த முடியாது. கற்பனை செய்து பார்க்க இயலாத அளவு தீவிர வலி இருக்கும்.பல்வலிக்கு என்ன காரணம் என்பதைப் பல் மருத்துவரால்தான் சரியாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், உடனடியாக மருத்துவரைச் சந்திக்க இயலாத நிலையில் வீட்டில் கிடைக்கும் சில பொருள்களைக் கொண்டு பல்வலியின் தீவிரத்தை மட்டுப்படுத்தலாம்.

கிராம்பு

வீட்டில் நாம் கிராம்பு வாங்கி வைத்திருந்தால் பல்வலி ஏற்படும் சமயத்தில் அது கைகொடுக்கும். கிராம்பில் யூஜினோல் என்ற வேதிப்பொருள் உள்ளது. அதற்கு இலேசான மயக்கத்தை அளிக்கக்கூடிய தன்மை உண்டு. பல்வலி ஏற்படும் இடத்திலுள்ள நரம்புகளை மரத்துப்போகச் செய்வதன் மூலம் வலியிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கக்கூடிய தன்மை கிராம்புக்கு உள்ளது.முழு கிராம்பை அல்லது கிராம்பைப் பொடி செய்து அல்லது கிராம்பு எண்ணெய்யை இதற்குப் பயன்படுத்தலாம். பற்களுக்கிடையே கிராம்பை வைத்து மென்றால் அதிலிருந்து சாறு வெளிப்படும். வலி உள்ள இடத்தில் கிராம்பு எண்ணெய்யைத் தடவுவதன் மூலமாகவும் வலியைக் குறைக்கலாம். கிராம்பு எண்ணெய்யை நேரடியாகப் பல்லின்மீது தேய்த்தால் சில வேளைகளில் பல்வலியை விடத் தீவிரமான எரிச்சல் ஏற்பட்டுவிடக்கூடும். ஆகவே சிறிதளவு பஞ்சில் இரண்டு அல்லது மூன்று சொட்டு கிராம்பு எண்ணெய்யை ஊற்றி, அந்தப் பஞ்சை பல்வலி உள்ள இடத்தில் வைக்கலாம்.

உப்பு நீர்

உப்பு நீரைக் கொண்டு வாய் கொப்பளிப்பது பலருக்குப் பல்வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். உப்பு நீர் இயற்கை கிருமி நாசினியாகச் செயல்படக்கூடியது. உப்பு நீரால் வாய் கொப்பளிக்கும்போது அது பற்களுக்கிடையே உள்ள உணவு துணுக்குகளை அகற்றி, அழற்சியைக் குணமாக்குகிறது. வாய்க்குள் இருக்கும் காயம் ஏற்பட்டிருந்தாலும் ஆற்றுகிறது.

பனிக்கட்டி

வீட்டில் ஐஸ் துண்டுகள் இருக்கும். மெல்லிய துணியில் ஐஸ் துண்டுகளை வைத்து ஒத்தடம் இடுவதால் நரம்புகள் மரத்து வலி குறையும். பல்வலியால் வீக்கம் ஏற்பட்டிருந்தால் ஐஸ் துண்டுகள் இதத்தை அளிப்பதோடு, வீக்கத்தைக் குறைக்கும். பல் பிடுங்கியபிறகு குளிர்ந்த பொருள்களைச் சாப்பிடும்படி மருத்துவர் கூறுவது வழக்கம்.

வெள்ளைப்பூண்டு

வெள்ளைப்பூண்டுக்குக் கிருமிகளை எதிர்க்கும் பண்பு உண்டு. தீவிரமான பல்வலியிலிருந்து வெள்ளைப்பூண்டு நிவாரணம் அளிக்கும். வெள்ளைப்பூண்டு இரண்டு பல் எடுத்து அதை நசுக்கி, மேசை உப்பு மற்றும் மிளகு தூள் கலந்து பல்வலி இருக்கும் இடத்தில் வைக்கலாம். வெள்ளைப்பூண்டில் வாயில் கடித்து அதன் சாற்றை வலியுள்ள இடத்தில் படும்படி செய்யலாம். வெள்ளைப்பூண்டின் பல்லை நசுக்க வேண்டும். அதை வெட்டினால் சாறு முழுவதும் வெளியே வீணாகிவிடும்.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் இதுபோன்ற மூலிகைகளைப் பயன்படுத்தும் முன்னர் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வது அவசியம்.

More News >>