கோழிக்கோடு விமான விபத்து பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
கடந்த 7ம் தேதி துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது. கன மழை பெய்து கொண்டிருந்தபோது தரையிறங்கிய இந்த விமானம் ஓடுதளத்திலிருந்து விலகிச் சென்று விமான நிலையத்தின் சுற்றுச்சுவரை இடித்து 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் விமானம் இரண்டாகப் பிளந்தது. இந்த விபத்தில் பைலட் மற்றும் உதவி பைலட் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விமானம் தீ பிடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் மொத்தம் 190 பயணிகள் இருந்தனர். காயமடைந்த 170க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் இறந்தனர்.
இதையடுத்து பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த மஞ்சுளா குமாரி (37) என்ற இளம் பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இவர் ஊரடங்கு சட்டத்திற்கு முன் தனது கணவர் பிரமோதை பார்ப்பதற்காகத் துபாய் சென்றிருந்தார். இந்நிலையில் ஊருக்குத் திரும்பி வந்தபோது இவர் விபத்தில் சிக்கினார்.
இவர் பலியானதைத் தொடர்ந்து விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே ஏர் இந்தியா சார்பில் விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்கான இடைக்கால நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. மரணமடைந்தவர்களில் 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ₹10 லட்சமும், 12 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ₹5 லட்சமும் வழங்கப்படுகிறது.