விஜய்யின் மாஸ்டர் நவம்பர் 14ல் ஒடிடியில் ரிலீஸ் போஸ்டரால் பரபரப்பு.. ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சி..

கொரோனாவும், ஊரடங்கும் மக்களின் உயிரோடு மட்டுமல்ல அவர்களின் வாழ்கையிலும் கடுமையாக விளையாடிவிட்டது. பல லட்சம் பேர் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர். சினிமா துறையில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சினிமா படப்பிடிப்பு, தியேட்டர் திறப்பு எல்லாவற்றையும் 5 மாதமாக முடக்கி இருக்கிறது. இதனால் 500 கோடி ரூபாய்க்கு மேல் முடங்கி விட்டது.படப்பிடிப்பு நடக்காததால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். வருமானம் இல்லாமல் பட்டினி கிடப்பதாக வில்லன் நடிகர் சூரியகாந்த், சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் தவிப்பதாக வில்லன் நடிகர் பொன்னம்பலம் ஆகியோர் வெளிப்படையாக அறிவித்து உதவி கேட்டனர்.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர். சூர்யா நடித்த சூரைப்போற்று, தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி நடித்த டேனி, யோகிபாபு நடித்த காக்டெயில் உள்ளிட்ட படங்கள் படப்பிடிப்பு முடிந்தும் தியேட்டரில் திரையிட முடியவில்லை. பொறுத்துப்பார்த்தவர்கள் இதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில் பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, காக்டெயில் படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது. ஆனால் சூரரைப்போற்று, மாஸ்டர் ஆகிய படங்கள் தியேட்டரில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டது. இப்படிச் சொல்லி 2 மாதத்துக்கும் மேலாக தியேட்டர்கள் திறந்த பாடில்லை. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை. இதன் விளைவாக சூர்யாவின் சூரரைப்போற்று படமும் ஒடிடி தள ரிலீசுக்கு வந்திருக்கிறது.

அமேசான் பிரைமில் வரும் அக்டோபர் 30ம் தேதி படத்தை வெளியிடவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஈடு செய்யும் விதமாக அடுத்த 2 படத்தில் மேலும் கடுமையாக உழைத்து அப்படங்களை நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்வேன் என்று ரசிகர்களுக்குச் சமாதானம் சொல்லியிருக்கிறார் சூர்யா.கோலிவுட்டில் பெரிய ஹீரோ படம் ஒடிடியில் ரிலீஸானால் அதைத்தொடர்ந்து மற்ற பெரிய ஹீரோக்களின் படங்களையும் ஒடிடி தளங்கள் கைப்பற்றும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன. மாஸ்டர் படத்துக்கு 80 முதல் 100 கோடி வரை விலை பேசுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதைப் படத் தரப்பு மறுத்தது. மாஸ்டர் படம் தியேட்டரில்தான் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களையும் தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் மாஸ்டர் வேர்ல்ட் பிரிமியர் என்ற போஸ்டர் நெட்டில் வலம் வருகிறது. நவம்பர் மாதம் 14ம் தேதி மாஸ்டர் ஒடிடி தளத்தில் வரும் என்பதுபோல் பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மையல்ல என்ற தகவலும் கூடவே வலம் வருகிறது. இது யார் செய்யும் தகிடுதத்தம் என்பது புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

More News >>