குரங்கணி தீ விபத்தில் காதல் ஜோடி மரணம் - பலி எண்ணிக்கை அதிகரிப்பு

குரங்கணி தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றபோது காட்டுத் தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் 90 சதவீதம் தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த திவ்யா சிகிச்சை பலனின்றி செவ்வாய் அன்று இறந்தார். திவ்யாவுடன் மலையேற்றத்துக்கு சென்ற அவரது கணவர் விவேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது திவ்யாவும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

திவ்யா இறந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. ஈரோட்டில் கல்லூரியில் பணிபுரிந்து வந்த திவ்யாவும், அவரது கணவர் விவேக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்துள்ளனர்.

10 நாள்களில் கணவன், மனைவி இருவரும் வெளிநாடுசெல்ல இருந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி இறந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா இறந்ததை அடுத்து குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>