திருவனந்தபுரம் விமான நிலையம் அதானிக்கு குத்தகைக்கு விடப்பட்டதற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு
நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களைத் தனியாருக்குக் குத்தகைக்கு விட மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி திருவனந்தபுரம் உள்பட 3 விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு 50 வருடத்திற்குக் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டது. திருவனந்தபுரம் விமான நிலையத்தைக் குத்தகைக்கு விடும் மத்திய அரசின் நடவடிக்கைக்குக் கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகக் கேரள சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே மத்திய அரசின் முடிவுக்குத் தடை விதிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது, திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்குக் குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவுக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். ஆனால் இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், விசாரணையை அடுத்த மாதம் 15ம் தேதிக்குத் தள்ளிவைத்தது.