ஜெயராஜூக்கு 17 காயங்கள், பென்னிக்ஸுக்கு 13 காயங்கள்! - சிபிஐயின் அதிர்ச்சி அறிக்கை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. இவர்கள் இருவரையும் காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் அதில் லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறை படிந்துள்ளதாகவும் அப்போதே கொலையின் கொடூரங்கள் குறித்துப் பேசப்பட்டன. இதனால் சிறையில் அடைத்த சிலமணி நேரங்களிலேயே இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் நடந்த நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் புதிய தகவல்களை அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ளனர். அதில், ``தந்தை, மகன் மரணத்துக்கு அவர்களின் உடலில் கடுமையான காரணங்கள் இருந்ததே காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெனிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்தன. இது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் அனுபவித்த சித்திரவதையை வெளிக்கொணரும்விதமாக சமீபத்தில் சில வீடியோ காட்சிகள் வெளிவந்தன. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரின் உடற்கூறு ஆய்வின்போது எடுக்கப்பட்ட காட்சிகள்தான் அவை. அந்த வீடியோவில் தந்தை, மகன் இருவரது பின்புறமும் கொடூரமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பென்னிக்ஸின் பின்புறத்தின் தோல் உரிக்கப்பட்டுள்ளது பார்ப்பவர்களை அச்சத்தில் உறையவைத்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.