ஒடிடியில் படம் வெளியிடும் சூர்யாவுக்கு இயக்குனர் ஹரி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு.. தியேட்டர் ரசிகர்கள் கைதட்டல்தான் நம்மை உயர்த்தியது..

கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதத்துக்கும் மேலாகத் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. விஜய் நடித்த மாஸ்டர், சூர்யா நடித்த சூரரைப்போற்று, தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் போன்ற பல படங்கள் முற்றிலும் முடிந்து திரைக்கு வரத் தயாராக இருந்தன. இந்த மாதம் திறக்கும் அடுத்த மாதம் திறக்கும் என்று எதிர் பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது.தயாரிப்பாளர்களும் கோடிகளில் பணத்தை முதலீடு செய்து படத்தை எடுத்து முடித்தும் ரிலீஸ் செய்ய முடியாமல் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். இந்த ஆண்டில் தியேட்டர்கள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் சிலர் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தனர்.

ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள், கீர்த்தி நடித்த பெண்குயின், வரலட்சுமி நடித்த டேனி, யோகிபாபு நடித்த காக்டெயில் ஆகிய படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆகின. சூர்யாவின் சூரரைப் போற்றுபடம் தியேட்டர் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது என்று சூர்யாவே அறிவித்திருந்தார். ஆனால் தியேட்டர் திறப்பு இப்போதைக்கு இருக்காது என்று அமைச்சர் அறிவித்தார். மேலும் காத்திருக்க முடியாத சூழலில் இப்படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்ய முடிவுசெய்து அறிவித்தார். அதன்படி வரும் அக்டோபர் 30ம் தேதி படத்தை அமேசான் பிரமையில் வெளியாக உள்ளது. இப்படத்தைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார்.பெரிய ஹீரோ படம் ஒடிடியில் ரிலீஸ் ஆகாத நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று படம் வெளியாவது ரசிகர்களை ஒடிடி தளம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதே சமயம் தியேட்டர் அதிபர்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. இந்நிலையில் சூர்யாவின் முடிவுக்கு எதிர்ப்பு எழ ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்பிரமணியம், சூர்யா தனது படத்தை ஒடிடியில் வெளியிட எடுத்த முடிவு திரை அரங்குகளை நிரந்தரமாக மூட வழிவகுக்கும் என்று கூறியிருந்தார் தற்போது பிரபல இயக்குனர் தனது எதிர்ப்பை வேண்டுகோள் வடிவில் தெரிவித்திருக்கிறார்.

சூர்யா நடித்த சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை இயக்கியவர் ஹரி. இவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சூர்யா தனது சூரரைப்போற்று படத்தை ஒடிடியில் வெளியிட எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்யக் கேட்டிருக்கிறார். திரைப்பட இயக்குனர் ஹரி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவதுமதிப்பிற்குரிய சூர்யா அவர்களுக்கு உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் பார்ப்பதில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கை தட்டல்கள் தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்து விட வேண்டாம். சினிமா எனும் தொழில் நமக்குத் தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் தியேட்டர் என்கின்ற கோவிலில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக்கும் உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும் வரை உங்கள் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும். இவ்வாறு இயக்குனர் ஹரி தெரிவித்துள்ளார். இவர் அடுத்து சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க உள்ளார். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில் ஹரி சூர்யாவுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>