மகனின் தேர்வுக்காக வியக்க வைத்த தந்தையின் பேரன்பு.. நெகிழ்ந்து உதவிய ஆனந்த் மஹிந்திரா!
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், மனவார் தேசில் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளி சோபாராம். இவருடைய மகன் அசீஸ், பத்தாம் வகுப்புத் தேர்வில் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து தேர்ச்சி பெறாத பாடங்களின் தேர்வை மீண்டும் எழுத, ரூக் ஜனா நாகின் என்ற கல்வித் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்தவருக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை தேர்வு நடந்துள்ளது. ஆனால் தேர்வு மையம் இவர்களின் கிராமத்துக்கு அருகில் இல்லாமல், கிராமத்தில் இருந்து 106 கி. மீ. தொலைவில் தார் நகரத்திலிருந்தது. ஊரடங்கால் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அசீஸ் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த விஷயம் சோபாராமுக்கு தெரியவர, மகனைத் தேர்வு எழுத வைக்க 106 கி. மீ. தூரத்தில் சைக்கிள் சென்று தார் நகரத்துக்கு சென்று மகனை தேர்வெழுத வைத்தார். நண்பரிடம் 500 ரூபாய்க் கடன் வாங்கிக்கொண்டும், தனது கிராமத்தில் இருந்து சைக்கிளில் பயணம் செய்திருந்தார். தேர்வு எழுதி முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தபோது, விஷயம் அறிந்து அரசு அதிகாரிகள், அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். தன் மகனுக்கு வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக சோபாராம் செய்த செயல் குறித்து அம்மாநில முதல்வர் கமல்நாத் உட்படப் பலர் நெகிழ்ந்து பாராட்டியிருந்தனர்.
இந்த தந்தையின் பாச செயல் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்தராவுக்கு தெரியவர இப்போது சோபாராமுக்கு உதவ அவர் முன்வந்துள்ளார். ``இவர் ஒரு வீரதீரமான பெற்றோர்.தன் குழந்தைக்காக பெரிய கனவு காண்பவர். இது போன்ற செயல்கள் தான் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு பெரிய எரிசக்தியாக இருக்கும். எங்கள் அறக்கட்டளை சோபாராம் மகனின் கல்வி செலவை முழுமையாக ஏற்கும்" என்று நெகிழ்வாக பதிவிட்டுள்ளார்.