சோகத்தில் முடிந்த 3 மணிநேர போராட்டம்... சடலமாக மீட்கப்பட்ட நீலகிரி அண்ணன் - தங்கை!
நீலகிரி தேவாலா பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா. 22 வயதான இவர் அந்தப் பகுதியில் இருந்த வனப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இன்று விழுந்துள்ளார். இவரை காப்பாற்றுவதற்காக அவரின் அண்ணன் தமிழ் அழகன் மற்றும் உறவினர் முரளிதரன் ஆகியோரும் கிணற்றில் குதித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதில் பாழடைந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக அவர்களும் சிக்கியுள்ளனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல்கொடுத்துள்ளனர் .தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அண்ணன் தங்கையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடிவு துயரமாகவே முடிந்தது. சுகன்யா, அவரின் அண்ணன் மற்றும் உறவினர் ஆகியோர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டையின் காரணமாக கிணற்றில் குதித்தார்களா அல்லது தவறி கிணற்றில் விழுந்தார்களா என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.