கொரோனா நிபந்தனைகளை மீறினால் நாய் கூடு, உச்சி வெயில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிரடி
அமெரிக்கா, இத்தாலி உள்பட வளர்ந்த நாடுகளும், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளும் பகீரத முயற்சி எடுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிரக் குறையவில்லை. இதையடுத்து கொரோனா நிபந்தனைகளைப் பொதுமக்கள் கடைப்பிடிப்பதைத் தீவிரப்படுத்த பெரும்பாலான நாடுகள் தீர்மானித்துள்ளன. பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக அகலத்தை கடைப்பிடிப்பது உட்பட நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் வழக்கு, கைது போன்ற வழக்கமான நடவடிக்கைகள் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிலிப்பைன்ஸ் நாட்டிலும் முதலில் இதே போலச் சாதாரண நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் பொதுமக்கள் அதைக் கண்டு கொள்வதாக இல்லை. இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்தது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா நிபந்தனைகளை மீறிய 63 வயதான முதியவரை போலீசார் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்குப் பிறகும் நிபந்தனைகளை யாரும் ஒழுங்காகப் பின்பற்றவில்லை. இதையடுத்து கடந்த சில தினங்களாக கொரோனா நிபந்தனைகளை யாராவது மீறுவது தெரிந்தால் வந்தால் அவர்களைப் பிடித்து போலீசார் உடனடியாக நாய் கூட்டில் அடைத்து விடுகின்றனர்.
ஒரு நாள் முழுவதும் அந்த கூட்டிலேயே கிடக்க வேண்டும். இது தவிரச் சிலரை போலீசார் பிடித்து உச்சிவெயிலில் ரோட்டில் அமர வைக்கின்றனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் தற்போது கொரோனா நிபந்தனைகளை கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிலிப்பைன்ஸ் நாட்டு போலீசார் கூறுகின்றனர். இதற்கிடையே மும்பை தாராவியில் மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் பிலிப்பைன்ஸ் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக மும்பை மாநகராட்சி கமிஷனருடன் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரிகள் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.