திருவனந்தபுரம் தலைமைச் செயலக தீ விபத்து கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம்
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் மாநில புரோட்டோகால் தலைமை அதிகாரி அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இந்த அலுவலகத்தில் தான் திருவனந்தபுரம் அமீரக தூதரக தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அலுவலகத்தில் இரண்டு முறை தங்கக் கடத்தல் வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் நேற்று மர்மமான முறையில் தீ பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கக் கடத்தல் ஆவணங்களை ஆளுங்கட்சியினர் தான் திட்டமிட்டு எரித்ததாகக் காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று மாலை முதலே திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் போர்க்களமாக மாறியது. காங்கிரஸ், பாஜக, முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. இன்று காலை முதலே பாஜக மற்றும் இக் கட்சியின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா, காங்கிரஸ் உள்படக் கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல முறை போலீசார் போராட்டக்காரர்களைத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்து வருகின்றனர். இதனால் திருவனந்தபுரம் தலைமைச் செயலக பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
திருவனந்தபுரம் மட்டுமல்லாமல் கொச்சி, கோழிக்கோடு உள்படக் கேரளாவில் பல பகுதிகளிலும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த தீ விபத்து சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நேற்று இரவோடு இரவாகக் கேரள கவர்னர் ஆரிப் முகமது கானை அவர் நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை விடுத்தார். கேரளாவில் போராட்டம் தீவிரமாகி வருவதைத் தொடர்ந்து பினராயி விஜயன் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.