சம்பளத்திற்கு பணமில்லை கோவில் நகைகளை அடகு வைக்க கேரள தேவசம் போர்டு முடிவு
கேரளாவில் பெரும்பாலான கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேவசம் போர்டுகள் தான் நிர்வகித்து வருகின்றன. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தேவசம் போர்டின் கீழ் சபரிமலை உட்பட மொத்தம் 1,252 கோவில்கள் உள்ளன. சபரிமலை கோவில் மூலம்தான் இந்த தேவசம் போர்டுக்கு முக்கிய வருமானம் கிடைக்கிறது.
இந்த வருமானத்தை வைத்துத் தான் மற்ற அனைத்து கோவில்களும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. சபரி மலையில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் இருந்து தான் மற்ற கோவில் ஊழியர்கள் மற்றும் தேவசம் போர்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சபரிமலை கோவில் உள்பட முக்கிய கோவில்களில் உள்ள நகைகளை ரிசர்வ் வங்கியில் அடகு வைக்க தேவசம்போர்டு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.