இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32 லட்சம் தாண்டியது.. பலி 60 ஆயிரமாக அதிகரிப்பு..

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 32 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலியானவர் எண்ணிக்கையும் 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்காவில் 57.77 லட்சம் பேருக்கும், பிரேசிலில் 36.7 லட்சம் பேருக்கும் கொரோனா பாதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை நேற்று(ஆக.25) 32 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 67,151 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இது வரை 32 லட்சத்து 34,475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதில் 24 லட்சத்து 67,759 பேர் குணம் அடைந்துள்ளார்கள். இந்நோய்க்கு நேற்று பலியான 1059 பேரையும் சேர்த்தால் இது வரை 59,449 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், உலகில் இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 7 லட்சத்து 7267 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று 8 லட்சத்து 23,992 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், மொத்தம் இது வரை 3 கோடியே 76 லட்சத்து 51,512 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

More News >>