மனநிலை பாதித்த 15 வயது மகளை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய தந்தை...கேரளாவை உலுக்கிய கொடூரம்..!
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வெள்ளூர் என்ற இடத்தில் வசித்து வரும் ஒருவருக்கு 15 வயதான சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகள் உண்டு. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தந்தையும் மகளும் மட்டுமே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வருடம் இவர்களது வீடு வெள்ளத்தில் சேதம் அடைந்தது. இதையடுத்து அவர் அப்பகுதியிலுள்ள தனது நண்பரின் வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு வைத்து தனது மகளை அவர் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அவரது நண்பரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பிணியானார். இந்த விவரம் வெள்ளூர் போலீசுக்கு தெரியவந்தது. போலீஸ் விசாரித்தால் பக்கத்து வீட்டில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் தான் பலாத்காரம் செய்ததாக கூற வேண்டும் என்று தனது மகளிடம் அவர் கூறி வைத்திருந்தார். அதன்படியே அந்த சிறுமியும் தன்னை வெளிமாநில தொழிலாளர்கள் தான் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே அந்த சிறுமியை போலீசார் எர்ணாகுளத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு வைத்து நடந்த கவுன்சிலிங்கில் தனது தந்தையும், அவரது நண்பரும் சேர்ந்து தான் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் அந்த சிறுமியின் தந்தையையும், அவரது நண்பரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோட்டயம் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபகுமார், அந்த சிறுமியின் தந்தைக்கு மரணம் வரை கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவரது நண்பருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.