நீரிழிவைத் தடுக்கும், குழந்தைப்பேறின்மையைப் போக்கும்.. முருங்கை கீரையின் மருத்துவ பலன்கள்
'கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதுபோல்' என்பது தமிழ்ப் பழமொழி. கையில் நல்ல வாய்ப்பை வைத்துக்கொண்டு, வாய்ப்பை வெளியில் தேடி அலைவது புத்திசாலிதனம் அல்ல என்பது இதன் பொருள்.
முருங்கை கீரையும் அவ்வாறே நமக்கு அருகில், பெரும்பாலும் விலையில்லாமல் அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சத்துகள் நிறைந்த கீரையாகும். கிராமங்களில் பொதுவாக வீட்டின் புழக்கடையில் முருங்கை மரங்கள் கண்டிப்பாக நிற்கும். தெருவில் இருவர் வீடுகளில் முருங்கை மரங்கள் இருந்தால், அத்தெருவில் அனைவருக்குமே முருங்கை கீரை, முருங்கை காய் தாராளமாக கிடைக்கும்.
முருங்கை கீரையிலுள்ள சத்துகளை அறிந்த வெளிநாட்டினர், இந்தியாவிலிருந்து முருங்கை கீரையை வாங்கிக்கொள்ளுகின்றனர். நாம் புறக்கணிப்பதாலோ என்னவோ, முருங்கை கீரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. வெளிநாடுகளில் முருங்கை கீரையை உலர்த்தி செய்யப்பட்ட பொடிகள் கொண்ட மாத்திரைகள் விற்பனையாகின்றன.
நியூட்ரோசூட்டிகல்
உடலுக்கு நன்மை செய்யக்கூடிய, நாள்பட்ட வியாதிகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடிய உணவு பொருள்கள் நியூட்ரோசூட்டிகல் (nutraceuticals) என்று அழைக்கப்படுகின்றன. இதை சிறப்பு செயல்பாடு கொண்ட உணவு (functional food) என்று புரிந்து கொள்ளலாம். முருங்கை கீரையும் நியூட்ரோசூட்டிகல் ஆகும்.
பீட்டா கரோட்டின்
காரட்டில் அதிக அளவு பீட்டா கரோட்டின் இருப்பதால் அது ஊட்டச்சத்து உணவாக கருதப்படுகிறது. பீட்டா கரோட்டின், நம் உடலில் வைட்டமின் ஏ சத்தாக மாறுகிறது. முருங்கை கீரையில் பீட்டா கரோட்டின் மிக அதிக அளவில் உள்ளது. ஆகவே, கண் பார்வைக்கு நல்லது. சுண்ணாம்பு சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி போன்ற சத்துகளுக்கு முருங்கை கீரை முக்கிய மூலப்பொருளாகும்.
குழந்தைகளின் ஆரோக்கியம்
இந்தியாவில் ஆண்டுதோறும் 5வயதுக்கு உட்பட்ட ஏறத்தாழ 30 ஆயிரம் சிறுபிள்ளைகள், வைட்டமின் ஏ குறைபாட்டினால், கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முருங்கை கீரையில் உள்ள கரோட்டின், உடலில் வைட்டமின் ஏ ஆக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
முருங்கை கீரையை நிழலில் உலர்த்தி வைத்து பொடியாக்கி 1 வயது முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஒரு மேசைக் கரண்டி அளவு அதாவது ஏறத்தாழ 8 கிராம் அளவு கொடுத்தால் ஒரு நாளைக்குத் தேவையானதில் 14 விழுக்காடு புரதம், 40 விழுக்காடு சுண்ணாம்பு சத்து (கால்சியம்), 23 கிராம் இரும்புச் சத்தும் கிடைக்கும். வைட்டமின் ஏ சத்தும் குழந்தைகளுக்குக் கிடைக்கும். உலர்ந்த கீரையை சேமித்து வைத்தல் எளிது. பல நாள்கள் கெடாமல் இருக்கும். முருங்கை இலையை நேரடியாக வெயிலில் உலர்த்தினால் வைட்டமின் ஏ சத்து குறைந்துவிடும். நிழலில் உலர்த்தினால் 70 விழுக்காடு வைட்டமின் ஏ சத்து பாதுகாக்கப்படும்.
நீரிழிவு பாதிப்பா? கவலையை விடுங்கள்!
முருங்கை கீரையில் ஐசோதியோசையனேட் (isothiocyanate) என்ற வேதிப் பொருள் உள்ளது. இது நீரிழிவு பாதிப்பை குறைக்கிறது. நிழலில் உலர்த்திய முருங்கை இலைப்பொடியை நாள்தோறும் ஏழு கிராம் வீதம் மூன்று மாதங்களுக்குச் சாப்பிட்டுவந்தால், சாப்பாட்டுக்கு முன்னர் அதாவது வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை அளவு 13.5 விழுக்காடு குறைகிறது என்று பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. இக்கீரையில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் (chlorogenic acid), சாப்பிட்ட பின்னர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயருவதை தடுக்கிறது.
இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம்
இரத்த அழுத்த விகிதத்தைச் சரியாகப் பராமரிக்க உதவும் குவெர்சிட்டின் (Quercetin) என்ற வேதி பொருள், முருங்கை கீரையில் உள்ளது. இரத்தக்கொதிப்புக்கான மாத்திரையை தினமும் எடுப்பவர்கள் முருங்கை கீரையை சூப் (soup) வைத்து தண்ணீரை வெளியேற்றாமல் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து காலை உணவோடு சேர்த்து சாப்பிடவேண்டும். சிலர் இடித்து பக்குவப்படுத்தியும் சாப்பிடுகிறார்கள். இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் எந்த உணவுமே இதயத்திற்கு நன்மை அளிக்கும். அவ்விதத்தில் முருங்கை கீரை, இதயத்திற்கு நன்மை செய்கிறது.
இரத்தசோகை
கர்ப்பிணிப் பெண்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், கிராமப்புற மக்கள் கறிவேப்பிலை, முருங்கை இலை இரண்டிலும் ஒவ்வொரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு தம்ளர் தண்ணீரைச் சேர்த்து, அது பாதியளவாக குறையும்வரை அடுப்பில் சூடுபடுத்தி, வடிகட்டி குடிநீராகக் கொடுக்கிறார்கள். இது மிகவும் பயனுள்ள முறை. கர்ப்பிணிப் பெண்கள் இதைத் தொடர்ந்து செய்துவந்தால், கால் வீக்கம் நன்கு குறைவதை உணரலாம்.
விறைப்புத் தன்மை குறைபாடு
தாம்பத்ய உறவின்போது ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைவாக இருப்பதாக சிலர் உணரக்கூடும். பொதுவாக உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பு அளவு கூடுவது, நீரிழிவு குறைபாடு ஆகியவையே விறைப்புத்தன்மை குறைவதற்கு காரணமாக அமைகின்றன. முருங்கை கீரை இதுபோன்ற குறைபாடுகள் அனைத்தையும் போக்குகிறது. முருங்கை கீரை உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை அதிகரிப்பதோடு, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதன் காரணமாக இரத்த ஓட்டம் சீராகிறது. விறைப்புத்தன்மை குறைபாடு நீங்குகிறது.
குழந்தைப்பேறின்மை
மொத்த குழந்தைப்பேறின்மையில் 40 விழுக்காடு அளவுக்கு ஆண்களே காரணம் என்று தெரிய வந்துள்ளது. விந்தணுவின் எண்ணிக்கை குறைவு, விந்தணுவின் இயக்கவேகம் குறைவு போன்றவை குழந்தைப்பேறின்மைக்கு பொதுவான காரணங்களாக அமைகின்றன. முருங்கை கீரை, ஆண்ட்டிஆக்ஸிடண்ட் என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களை கொண்டிருக்கிறது. ஆகவே, விந்தணு உற்பத்தியை தடுக்கும் காரணிகளுக்கு எதிராக இது செயல்படுகிறது. விந்தணுவின் மரபணு பாதிக்கப்படுவதையும் முருங்கை கீரை தடுக்கிறது. தொடர்ந்து முருங்கை கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் குழந்தை பாக்கியம் அடையலாம்.
முருங்கை கீரை உணவுகள்
முருங்கை கீரை சோறு
தேவையான பொருள்கள்: முருங்கை கீரை 3 கிண்ணம், சோறு 2 கிண்ணம், வேர்க்கடலை 1 கிண்ணம், தேங்காய் 4 துண்டுகள், பெரிய வெங்காயம் 100 கிராம், கடலை எண்ணெய் 1 தேக்கரண்டி, தேவையான அளவில் உப்பு, கடுகு, காய்ந்த மிளகாய், கடலை, கறிவேப்பிலை
செய்முறை: வாணலியில், எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நன்கு வதக்கவும். பின், வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கிளறவும். இந்த கலவையில், முருங்கை கீரை சேர்த்து வேகவிடவும். வெந்ததும், துருவிய தேங்காய் சேர்த்து, கிளறவும். அதில், உதிரியான சோறு, உப்பு சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும். சுவைமிக்க, முருங்கை கீரை சோற்றினை பரிமாறலாம்.
முருங்கை கீரை ஆம்லெட்
தேவையான பொருள்கள்: முட்டைகள் 3, முருங்கை கீரை 1 கைப்பிடி, பால் 2 மேசை கரண்டி, பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 3, இஞ்சி - சிறிய துண்டு, தேங்காய் துருவல் 3 மேசை கரண்டி, சீரகம் - ஒரு தேக்கரண்டி, சிறிதளவு கரம்மசாலா தூள், தேவையான அளவில் மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு, எண்ணெய்
செய்முறை : முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து கொண்டு, பாலில் முட்டையை உடைத்து ஊற்றி நுரைவரும் அளவுக்கு நன்றாக அடித்து கலக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போன்றவைகளை சிறிதாக நறுக்கவும். நறுக்கிய பொருட்களோடு தேங்காய் துருவல், சீரகம் போன்றவைகளை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த மசாலாவுடன் முருங்கை இலை, மசாலா தூள் சேர்க்கவும். மீதமிருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து மீண்டும் சிறிது நேரம் மிக்ஸியில் அரைக்கவும். அதில் அடித்த முட்டையையும், உப்பையும் சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைக் கல்லை சூடாக்கி கலவையை ஊற்றி ஆம்லெட்டாக சுவையுங்கள்.
கோவிட்-19 பாதிப்புள்ளோருக்கு முருங்கை கீரை ஆம்லெட் சில இடங்களில் சத்துணவாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
முருங்கை கீரை - பொதுவான உண்மைகள்
கொதிக்க வைத்த அல்லது காய வைத்த முருங்கை இலையில் மூன்று மடங்கு அதிகமாக உள்ள இரும்பு சத்தை நம் உடல் எளிதாக எடுத்துக்கொள்ளும். முற்றிய முருங்கை இலையே பெருமளவு மருத்துவ குணம் கொண்டுள்ளது. கோடைக் காலம், மழைக் காலத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வறண்ட காலம், குளிர் காலத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் இரும்பு சத்து, வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே தமிழகத்தில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் கிடைக்கும் முருங்கை இலையின் சுவை அதிகம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. முருங்கை இலையுடன் தக்காளியைச் சேர்த்துச் சமைத்தால் வைட்டமின் ஏ சத்து நீங்கிவிடுவதற்கான சாத்தியம் இருப்பதாக பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
முருங்கை கீரையால் வயிற்றுப் புண்கள் ஆற்றப்படும். உடலின் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும், கர்ப்பிணி மற்றும் வளரிளம் பெண்களின் ரத்த சோகையை நீக்கவும், தாய்மாருக்கு பால் சுரக்கவும் உதவும். கர்ப்பிணி பெண்கள், விளையாட்டு வீரர்களுக்கு ஆரோக்கிய உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. பித்த கிறுகிறுப்பை போக்கும். உடல் சூடு, மந்தம், மூர்ச்சை, கண் நோய், ஆஸ்துமா, மார்புச் சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டுவலி, குழந்தைபேறின்மை ஆகியவற்றை தடுக்கும். உடல் எடையைக் குறைக்கவும் உதவும்
முருங்கை கீரையை தயிரோடு சேர்த்து சாப்பிடக்கூடாது. இரவில் முருங்கை கீரை சாப்பிடக்கூடாது. சாப்பிடும் கீரை அப்படியே மலத்தில் கழிகிறது என்றாலும், வயிற்றுப்போக்கை உண்டாக்கினாலும் அப்படி ஒத்துக்கொள்ளாதவர்கள் மட்டும் தவிர்க்கலாம்.