நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடன் எழுதுகிறேன்!.. சுரேஷ் ரெய்னாவின் எதிர்காலத் திட்டம் இதுதானா?!
மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற அதே நாளில் சின்ன தல ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ``தோனி தனது வாழ்க்கையை 23 டிசம்பர் 2004 அன்று சிட்ட காங்கில் பங்களாதேஷுக்கு எதிராகத் தொடங்கினார், அதே நேரத்தில் 2005 ஜூலை 30 அன்று இலங்கைக்கு எதிராக 2005 இல் நான் அறிமுகமானேன். நாங்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்றாகத் தொடங்கினோம். அதேபோல் ஐ.பி.எல்லில் சி.எஸ்.கே அணியில் தொடர்ந்தோம். எனவே நாங்கள் இப்போதும் ஒன்றாக ஓய்வு பெற்றோம்" என்று ஓய்வு முடிவின் பின்னணியில் தோனிக்கும், தனக்கும் இருக்கும் நெருக்கம்தான் என்றும் காரணம் கூறினார்.
இந்நிலையில், ரெய்னா தனது எதிர்கால கனவு குறித்து காஷ்மீர் இயக்குனருக்குப் பெரிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ``மிகவும் நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டுக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் கிராமப்புற சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுத்து அவர்களைச் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன். எனது 15 வருட கிரிக்கெட் அனுபவத்தை அடுத்த தலைமுறைகளுக்குக் கொடுக்க முடியும். ஜம்மு காஷ்மீரிலிருந்து திறமையான சிறுவர்களைக் கண்டறிவதே எனது முதன்மையான நோக்கம்.
எனக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பின் மூலம் எதிர்கால கிரிக்கெட்டிற்குத் திறமையான வீரர்களை உருவாக்க முடியும். கிரிக்கெட் வெறும் விளையாட்டு அல்ல. இது தனிமனித ஆரோக்கியமும், ஒழுக்கமும் சார்ந்த விஷயம். சிறுவர்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும்போது அவர்களுக்குத் தானாகவே ஒழுக்கமும், உடல்நலமும் சார்ந்து சிந்திக்கத் தொடங்குவார்கள். இந்த வாய்ப்பை எதிர்கால இந்தியாவிற்கு என்னால் பயன்படுத்த முடியும்" என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.