தலையை சுற்ற வைக்கும் வெங்காயம் விலை! - பொதுமக்கள் அவதி
வெங்காயம் விலை ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திராவிலிருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. மழை காலம் வந்தால் குறிப்பாக வெங்காயம் விலை உயரும்.கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஆனால் இப்போது ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விலை உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்வதால் மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்துவிட்டது. இதனால் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தான் பெரிய வெங்காயம் அதிக அளவு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும். ஆனால் அங்கும் மழை பெய்வதால் மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது.வெங்காயம் விலை ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.