ஃபேஸ்புக்கில் புதிய ஷாப்பிங் வசதி அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் உள்ளதைப் போன்று முகநூலிலும் 'ஃபேஸ்புக் ஷாப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயனர்கள் பொருள்களை வாங்கும்படி வணிக நிறுவனங்கள் இந்த வசதி மூலம் காட்சிப்படுத்த முடியும். இன்ஸ்டாகிராம் ஷாப் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஃபேஸ்புக் ஷாப்பிங் வசதி தற்போது அமெரிக்காவில் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் உள்ள செக் அவுட் வசதியை அமெரிக்காவிலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தயாரிப்பாளர்களும் இணையும்படி விரிவாக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் செயலியை விட்டு வெளியே வராமல் பொருள்களை வாங்க முடியும்.இந்தச் செயலிகள் மூலம் பொருள்களை வாங்கும்போது நேரடியாகக் கடைகளுக்குச் சென்று வாங்குவது போன்று உணர முடியும். இந்த வசதியை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் இரண்டிலும் பரிசோதித்துப் பார்த்துள்ளோம். தகுதியுள்ள எல்லா வணிக நிறுவனங்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வழி செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆன்லைன் முறையில் பொருள்களைப் பார்க்கும் போது வாடிக்கையாளர்கள், அவற்றை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு பகிர்ந்துகொண்டு அக்குறிப்பிட்ட பொருளை வாங்குவது குறித்து அவர்களின் கருத்தை அறிந்து கொள்ள முடியும். மெசேஜிங் வசதியைப் பயன்படுத்தி விற்பனையாளர்கள்,வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியும்.கோவிட்-19 பரவல் காரணமாக உலகம் முழுவதும் 85 சதவீத மக்கள் ஆன்லைன் வழியாகப் பொருள்களை வாங்கும் முறையைப் பயன்படுத்துவார்கள் என்றும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பிலும் ஷாப்பிங் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

More News >>