வீடியோ கான்பரன்சில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. வரிவிகிதங்கள் மாறலாம்..

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று(ஆக.27) வீடியோ கான்பரன்சில் நடைபெறுகிறது.நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) என்ற ஒரே வரிவிகிதம் பின்பற்றப்படுகிறது. இதை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியது முதலே பல மாநிலங்கள் தங்களுக்கு ஏற்பட்ட வரி இழப்புகளை ஈடு செய்யக் கோரி வருகின்றன. மத்திய நிதியமைச்சர் தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்களில் இது பற்றி கோரிக்கை விடப்பட்டாலும் மத்திய அரசு வரிப்பகிர்வில் பல கோடி பாக்கி வைத்துள்ளது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ஜிஎஸ்டி வரி வசூல் மிகவும் குறைந்து விட்டது. இதனால், மாநிலங்களுக்கு வரிப்பகிர்வை மத்திய அரசு தரமுடியவில்லை. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தருவது தொடர்பாக அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், மாநிலங்களுக்கு ஏற்படும் ஜிஎஸ்டி வரி வருவாய் பற்றாக்குறையை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டியக் கட்டாயம் இல்லை. இந்த வரி வருவாய் பற்றாக்குறையைச் சந்தைக் கடன், வரிவிகிதத்தைப் உயர்த்துவது போன்றவை மூலமாக மாநிலங்கள் சமாளிக்கலாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று(ஆக.27) நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடைபெறும் கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதில், வரி இழப்பீட்டை அளிக்க வேண்டுமென்று மாநில நிதியமைச்சர்கள் குரல் எழுப்புவார்கள். மேலும், பல்வேறு பொருட்களின் வரிவிகிதங்களை மாற்றுவது குறித்தும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

More News >>