நீட் தேர்வு விவகாரம்.. ஏமாற்றாதீர்கள் மந்திரி.. ஸ்டாலின் கண்டனம்..

நீட் தேர்வு விவகாரத்தில், ஏமாற்றுவதை விட்டு விட்டு, செய்ய வேண்டியதைச் செய்யுங்கள் என்று தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(நீட்) மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால், மத்திய அரசு அதை நடத்துவதில் குறியாக உள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஜேஇஇ தேர்வும், செப்.13ல் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே, தேர்வை எதிர்த்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் நீட் மற்றும் ஜேஇஇ பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட், மகாராஷ்டிரா உள்பட 7 மாநில அரசுகள் சார்பில், இந்த தேர்வுகளை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் உள்படச் சிலர் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வைக் கைவிடக்கோரி மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மாலை கடிதம் எழுதியுள்ளார். அதில், ``கொரோனாவை கருத்தில் கொண்டு நடப்பாண்டு நீட் தேர்வைத் தவிர்க்க வேண்டும். நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். இது பற்றிய செய்தி வெளியானதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஒரு ட்வீட் பதிவிட்டார். அதில், நீட் எதிர்ப்பு உண்மையெனில் 7 மாநில அரசுகளைப் போலத் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றேன்! கடிதம் எழுதி இருக்கிறாராம் விஜயபாஸ்கர்.சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் இவரின் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள்? ஏமாற்றுவதை விடுத்துச் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

More News >>