நடிகை பூர்ணாவிடம் மோசடி 4 பேருக்கு ஜாமீன்
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. இவரது இயற்பெயர் ஷம்னா காசிம். இந்தப் பெயரில் தான் இவர் மலையாளத்தில் நடித்து வருகிறார். இவரது வீடு கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் திருச்சூரை சேர்ந்த 4 பேர் பூர்ணாவை பெண் பார்க்க வந்திருப்பதாகக் கூறி அவரது வீட்டுக்குச் சென்றனர். அப்போது நடிகை பூர்ணா வீட்டில் இல்லை. அவரது பெற்றோரிடம் பேசிய பின்னர் 4 பேரும் அங்கிருந்து சென்றனர்.
இதன் பின்னர் பூர்ணாவுடன் செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், தான் தான் பெண் பார்க்க வந்ததாகவும், தனக்கு மிக அவசரமாக 1 லட்சம் பணம் வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த பூர்ணா இதுகுறித்து கொச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக களத்தில் இறங்கினர். விசாரணையில் அக்கும்பல் பூர்ணாவை ஏமாற்றி மோசடி செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் ரபீக், அஷ்ரப், ரமேஷ் மற்றும் சரத் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இக்கும்பல் மேலும் பலரை ஏமாற்றி இதுபோல மோசடி செய்தது தெரியவந்தது. இவர்கள் பூர்ணா தவிர மேலும் சில நடிகைகளுக்கும் குறிவைத்திருந்தனர். இந்த வழக்கு எர்ணாகுளம் குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.