முகரம் ஊர்வலத்திற்கு உச்சநீதிமன்றம் தடை
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று முகரம். இதையொட்டி அன்றைய தினம் முஸ்லிம்கள் ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் தங்களது உடலை வாளால் வெட்டி காயப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வருட முகரம் பண்டிகை தமிழ்நாட்டில் 30ம் தேதியும், மற்ற மாநிலங்களில் 29ம் தேதியும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் முகரம் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷியா பிரிவு தலைவரான செய்யது ஜவாத் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி போப்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது விசாரணை நடைபெறும்போது ஊரடங்கு சட்ட சமயத்தில் ஒடிஷாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில் ரத யாத்திரை நடத்தவும், மும்பையில் உள்ள 3 ஜைன கோவில்களில் பூஜை நடத்தவும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.
எனவே அதேபோல முகரம் பண்டிகைக்கு ஊர்வலம் நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்று ஜவாத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி போப்டே, பூரி ஜெகநாதர் கோவில் மற்றும் மும்பை ஜைன கோவில்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்துத் தான் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் முகரம் ஊர்வலம் நாடு முழுவதும் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி ஷியா பிரிவு தலைவர் ஜவாத் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.