பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதில் பாஜகவுக்கு முதலிடம்
பாஜகவுக்குச் சாதகமாக பேஸ்புக் செயல்படுவதாகச் சமீபத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இதை பேஸ்புக் நிறுவனம் மறுத்தது. எந்த கட்சிக்கும் ஆதரவாக தாங்கள் செயல்பட மாட்டோம் என்று அந்த நிறுவனம் கூறியது. இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடத்தில் பேஸ்புக்கில் பாஜக தான் அதிக விளம்பரம் செய்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி முதல் இவ்வருடம் ஆகஸ்ட் 24 வரை உள்ள கணக்கின்படி பாஜக சார்பில் பேஸ்புக்கில் ₹4.61 கோடிக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதே கால அளவில் காங்கிரஸ் கட்சி ₹1.86 கோடிக்கு விளம்பரம் செய்துள்ளது. பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காகப் பணம் செலவழித்தவர்களின் பட்டியலில் முதல் 10 பேரில் 4 பேரும் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தங்களது முகவரியாக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தின் முகவரியைத் தான் பேஸ்புக்கில் கொடுத்துள்ளனர். அந்த 4 பேரும் பாஜக தலைமையுடனும், இக்கட்சியின் முக்கிய தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளவர்கள். 'மை பஸ்ட் வோட் பார் மோடி', என்ற பக்கத்திற்காக 1.3 கோடியும், 'பாரத் கே மன் கி பாத்' என்ற பக்கத்திற்காக 2.24 கோடியும், 'நேஷன் வித் நமோ' என்ற பக்கத்திற்காக 1.28 கோடியும், பாஜக தலைவர் ஆர் கே சின்ஹாவுடன் தொடர்புடைய பக்கத்திற்காக 60 லட்சமும் செலவழிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக பேஸ்புக்கில் விளம்பரம் செய்ய எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ள போதிலும், அதற்கு யார் யார் பணம் கொடுத்தார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதேபோல பேஸ்புக் விளம்பரங்களுக்காக ஆம் ஆத்மி கட்சியும் 69 லட்சம் செலவிட்டுள்ளது.