முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர், தமது அலுவலகப் பயன்பாட்டுக்கான பிஎஸ்என்எல் அதிநவீன உயர்தொலைபேசி இணைப்புகளை சன் தொலைக்காட்சிக்கு வழங்கியதாகவும், அதனால் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கடந்த 2015 டிசம்பரில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 14வது சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.இதற்கிடையில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஏழு பேரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை சிபிஐ நீதிபதி நடராஜன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து எழுத்து பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன்பிறகு விடுவிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை வரும் 14 ஆம் தேதி வழங்குவதாக நீதிபதி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கில் தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட 7 பேரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்தது. இதனையடுத்து பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com