இரண்டு நாள்களுக்கு முன்பு மனைவி இறப்பு.. சாப்பாடு இல்லை!.. நீதிபதியின் குடும்பத்தை துரத்தும் சோகம்
முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78 சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வந்தார். நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் தேவகோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
இதற்கிடையே, ஏ.ஆர்.லட்சுமணனின் மனைவி மீனாட்சி இரண்டு நாட்களுக்கு முன்புதான் மரணமடைந்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. நீதிபதி லட்சுமணன் தனது மனைவி மீனாட்சி ஆச்சி மேல் அளவு கடந்த அன்பு வைத்திருப்பார். மனைவியைப் பிரிந்து எங்கேயும் செல்லமாட்டார். சென்னையில்தான் இருவரும் தங்கி இருந்துள்ளனர். இதற்கிடையே, தான் ஆகஸ்ட் 24-ம் தேதி பேரன் திருமணத்திற்காக லட்சுமணனும், அவரின் மனைவி மீனாட்சியும் சென்னையிலிருந்து தேவகோட்டைக்கு வந்துள்ளார்கள். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போதே மீனாட்சி ஆச்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மனைவிக்கு உடல் நிலை சரியில்லாதது முதலே நீதிபதி லட்சுமணன் சோகமாக காட்சி அளித்துள்ளார்.
திருமணம் திங்கள் கிழமை காலையில் முடிய, மறுநாள் அதிகாலை அவரின் மனைவி மீனாட்சி கொரோனாவால் உயிரிழந்துள்ளார். தனது மனைவி இறந்ததிலிருந்தே சாப்பாட்டு தண்ணி இல்லாமல் இருந்துள்ளார் நீதிபதி லட்சுமணன். இதனால் அவரின் உடல்நிலையும் மோசமாகவே, உடனே, சிகிச்சைக்காகத் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர் உறவினர்கள். ஆனால் சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும்ஏற்படவில்லை. கடைசியில் மாரடைப்பால் இன்று அதிகாலை இறந்துவிட்டார். அடுத்ததடுத்த சோகத்தால் நீதிபதியின் குடும்பம் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.