ஜெயலலிதா வீட்டிலேயே மயங்கினார் முதலுதவி அளிக்கப்பட்டது - டாக்டர் சிவக்குமார்
ஜெயலலிதா வீட்டில் திடீரென மயங்கியதால் லேசான முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று டாக்டர் சிவக்குமார் கூறியுள்ளார்.
2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அப்போது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் 75 நாட்களுக்குப் பிறகு 2016-டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாசரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதாவின் குடும்ப டாக்டரான டாக்டர் சிவக்குமாரிடமும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதனை ஏற்று நீதிபதி ஆறுமுகசாமி முன்பு டாக்டர் சிவக்குமார் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக டாக்டர் சிவக்குமார் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சிவக்குமார், ”மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே சரும பிரச்சனைக்காக ஜெயலலிதா இரண்டு வாரம் ஸ்டெராய்டு எடுத்துக்கொண்டார். ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டதால் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கவில்லை.
ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே லேசான காய்ச்சல் இருந்தது. வீட்டில் திடீரென மயக்கமடைந்த காரணத்தினால் லேசான முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது நான் உடனிருந்தேன். 2016 செப்டம்பர் 26 வரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com