காங்கிரஸ் இன்னும் 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சிதான்.. குலாம்நபி காட்டம்..
காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல்களை நடத்தாவிட்டால், இன்னும் 50ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டியதுதான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியிருக்கிறார். சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம்நபி ஆசாத், சசிதரூர், பூபிந்தர்சிங்ஹூடா, மிலிந்த் தியோரா, மணீஷ்திவாரி, குரியன் உள்பட 23 பேர் இணைந்து கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில் சோனியா பதவி விலகி, நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். இந்த சூழலில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம், கடந்த ஆக.24ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. சோனியா காந்தி தலைமை வகித்தார். அவர் இடைக்காலத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், உடனடியாக புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது கூறினார்.
இதையடுத்து, மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் சோனியாவே தலைவராக நீடிக்க வேண்டுமென்றனர். அகமது படேல், அமரீந்தர்சிங் உள்ளிட்டோர் சோனியாவுக்கு ஆதரவாகப் பேசியதுடன், கடிதம் எழுதியவர்களை விமர்சித்திருக்கிறார்கள்.உடனே கடிதம் எழுதியவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் பேசுகையில், சோனியாவின் பணிகளைப் பாராட்டிப் பேசினார். அப்போது குறுக்கிட்ட பிரியங்கா காந்தி, நீங்கள் எழுதியதற்கு வேறு, பேசுவது வேறாக இருக்கிறது என்றார். இதன்பின், குலாம் நபி ஆசாத் ஏதோ விளக்கம் அளித்திருக்கிறார். கடைசியில் அந்த கூட்டத்தில் சோனியாவே இடைக்காலத் தலைவராக 6 மாதங்களுக்குத் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில், குலாம் நபி ஆசாத் அளித்த பேட்டி வருமாறு:காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்பு தேர்தல்களை நடத்த வேண்டும். மாநில தலைவர், மாவட்டத் தலைவர், ஒன்றிய தலைவர்களைத் தேர்தல் மூலமே தேர்வு செய்ய வேண்டும். தேசிய செயற்குழுவுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். கட்சியில் தலைவராக நியமிக்கப்படுபவருக்கு ஒரு சதவீத ஆதரவு கூட இல்லாமல் இருக்கலாம். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்குக் கட்சியினரில் 51 சதவீத ஆதரவு இருக்கும். அப்போதுதான், பதவிக்கு வர முடியாதவர்கள் தங்கள் தோல்வியை உணர்ந்து கட்சிக்குத் தீவிரமாக பணியாற்றி செல்வாக்கைத் தேடுவார்கள்.கட்சிக்குள் தேர்தல் நடத்தாவிட்டால், இன்னும் 50 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உட்கார வேண்டியிருக்கும். கட்சிக்குள் தேர்தலை நடத்தக் கூடாது என்று எதிர்க்கும் சில முக்கிய தலைவர்கள் எல்லாம் தோற்றுப் போகக் கூடியவர்கள். பதவி போய் விடும் என்ற பயத்தில்தான் அவர்கள் அமைப்பு தேர்தல்களை நடத்த விடாமல் செய்கின்றனர்.
மாநில தலைவராக நியமிக்கப்படுபவருக்குக் கட்சிக்குள் ஆதரவே இருக்காது. ஆனாலும் அவர் டெல்லிக்கு ஓடி ஓடி வந்து சில மூத்த தலைவர்களைப் பிடித்து லாபி செய்து பதவியில் ஒட்டிக் கொள்கிறார்கள். பிறகு எப்படி கட்சி வளரும்? இதனால்தான் தொண்டர்களை இழந்து வருகிறோம். தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறோம். நான் இன்னும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு அரசியலில் இருப்பேன். ஆனால், தலைவர் பதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை. கட்சி வளர வேண்டும் என்பதற்காகவே கடிதம் எழுதினேன்.இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறினார்.