கஞ்சா போதையில் ரகளை செய்த வாலிபர் அடித்துக்கொலை
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள மஞ்சேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (29). ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் கஞ்சாவுக்கு அடிமையானவர். அடிக்கடி கஞ்சா போதையில் அப்பகுதியில் ரகளையில் ஈடுபடுவது வழக்கம். நேற்று இரவும் வழக்கம்போல இவர் கஞ்சா போதையில் வந்துள்ளார். ஒரு கையில் கத்தரிக்கோலுடன் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்த கிருபாகரன், அங்கிருந்த ஜிதேஷ் என்ற வாலிபரைச் சரமாரியாகக் குத்தினார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த வீட்டினர் கிருபாகரனை அடிக்க பாய்ந்தனர்.
இதையடுத்து அந்த வீட்டை விட்டு வெளியே ஓடிய அவர், பக்கத்து வீட்டில் நுழைந்து அங்கிருந்த உமேஷ் (28) என்ற வாலிபரையும் குத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் அங்கு ஊர் மக்கள் திரண்டனர். அவர்கள் கிருபாகரனைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தன்னிடமிருந்த கத்தரிக்கோலால் அப்பகுதியினரையும் குத்த பாய்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் கிருபாகரன் மீது கல்வீசித் தாக்கினர். கையில் கிடைத்த தடி மற்றும் ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கிருபாகரன் அங்கேயே ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார்.
இதையடுத்து ஊர்மக்களே அவரை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து மஞ்சேஸ்வரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். வாலிபரை ஊர் மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கிருபாகரன் கத்தரிக்கோலால் குத்தியதில் படுகாயமடைந்த உமேஷ் மற்றும் ஜிதேஷ் இருவரும் சிகிச்சைக்காக காசர்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.