அவலமும், அசிங்கமும் இந்த ஆட்சியில் தான் நடந்து கொண்டிருக்கிறது - கமல்ஹாசன் அறிக்கை..!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழக ஆசிரியர் இந்திய திருநாட்டின் குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரித்த மாபெரும் வரலாறு கொண்ட நம் தமிழ்நாட்டு ஆசிரியர் சமூகம், இன்று மூட்டை முடிச்சுகளுடன் வீதியில் நிற்கின்றனர்.

2012 க்கு முன் வரை நேரடியாக பணித்தேர்வு ஆணையம் முலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை (TNTET) கொண்டு வந்தது இதே அதிமுக அரசு தான். 2013 இல் நடைபெற்ற அந்த தேர்வில் 7 லட்சம் பேர் தேர்வு எழுதி 94,000 பேர் வெற்றி பெற்றனர்.

ஆனால் வெறும் 14000 பேருக்கு மட்டுமே பணி ஆணை வழங்கி, 80 ஆயிரம் பேரின் வாழ்க்கையை 7 ஆண்டுகளாக கேள்விக்குறியாக்கி வைத்துள்ளது இந்த அரசு. 2013 யில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்காத அரசு 2014, 2017,2019 ஆம் ஆண்டுகளில் தேர்வு நடத்தியது ஏன்? கண் துடைப்பா? ஒருபுறம் தேர்ச்சி அடைந்தவருக்கு ஆசிரியர் பணி இல்லை என்ற அவலமும், இன்னொருபுறம் ஆசிரியர்கள் இல்லை என பள்ளிகள் மூடப்படும் அசிங்கமும் இந்த ஆட்சியில் தான் நடந்து கொண்டிருக்கிறது.

மக்களால் முதல்வராக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத நீங்கள், நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தும் போது, முறையாக தேர்வு பெற்ற 80-ஆயிரம் பேரின் வாழ்க்கையை ஒடுக்குவது ஏன்? இளைய தலைமுறை ஆசிரியர்கள் இந்த அரசை கேள்வி கேட்கவும், மாற்றவும் தயங்க மாட்டார்கள் என்ற பயமா? நேர்மையாக, தகுதியானவர்கள் நேரடியாக பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் நீங்களும் உங்கள் கட்சிகாரர்களும் காசு பார்க்க முடியாது என்ற அதிருப்தியா? பெயருக்கு அனுதாப அறிக்கை விடுவதும், அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் வருத்தப்படுவதும், அவர்கள் வாழ்க்கையை,வாழ்வாதரத்தை மாற்ற போவதில்லை.

மேலும் அவர் கூறிய தீர்மானங்கள் பின் வருமாறு

1. வரும் டிசம்பர் மாதம் 2013இல் தேர்வெழுதி வென்றவர்களின் சான்றிதழ் காலாவதியாகிறது. கல்வி எப்படி காலாவதி ஆகும், 7- ஆண்டு முடிவதால் 80-ஆயிரம் பட்டதாரிகள் வாழ்க்கையை காலாவதி ஆக விடுவதா. உடனடியாக அவர்கள் சான்றிதழ்களை ஆயுட்கால சான்றிதழ்களாக மாற்ற வேண்டும்.

2. காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதில் இவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

3.இவர்கள் வாழ்வாதரம் மீட்க மாத உதவி தொகையை இந்த அரசு வழங்க வேண்டும். ஒரு நல்ல சமூகத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகப் பெரியது. அந்த ஆசிரியர் பணிக்கான கனவுகளோடும், தகுதிகளோடும் இருக்கும் 80 ஆயிரம் பேரின் வாழ்க்கையை சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு. நியாயமாய் கிடைக்க வேண்டிய ஒவ்வொரு விஷயத்தையும் போராடியே பெற வேண்டும் எனும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

வேலையின்றி விரக்தியில் சிலர் தற்கொலை செய்ய முயலும் அவல நிலை தமிழகத்தில் தொடராமல் தடுத்திடும் குறைந்த பட்ச கடமையையேனும் இவ்வரசு செய்ய வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் பந்தாடும் இந்த அரசு மக்கள் சக்தி முன் மண்டியிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. மக்கள் நீதி வெல்லட்டும் " என்று கூறியுள்ளார்.

More News >>