கோமாவில் பிரணாப்.. வென்டிலேட்டரில் சுவாசம்..
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. அவர் சுயநினைவில்லாமல் உள்ளதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குப் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், பிரணாப்புக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், வென்டிலேட்டர் இணைப்பில் சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே, அவர் மரணமடைந்து விட்டதாகத் தகவல் பரவி பின்னர், அத்தகவல் பொய்யானது என்று மறுக்கப்பட்டது. தற்போது, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து ராணுவ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிரணாப் தொடர்ந்து கோமாவில் உள்ளார். வென்டிலேட்டர் உதவியுடன்தான் சுவாசித்து வருகிறார். அவருக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று மற்றும் சிறுநீரக செயல்பாட்டுக்காகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கோவிட்19 பாதிப்பும் உறுதி செய்யப்பட்டதால், அதற்கான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.