அசாமில் பத்திரிகையாளர்களுக்கு ₹50 லட்சம் இன்சூரன்ஸ் பாதுகாப்பு
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் மிக அதிகரித்து வருகிறது. முதன்முதலாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 77, 266 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். உலக அளவில் ஒரே நாளில் இந்த அளவுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது இது தான் முதல்முறையாகும்.
அதிவேகமாக கொரோனா பரவி வரும் இந்த சூழ்நிலையில் அச்சப்படாமல் களப்பணி ஆற்றும் போலீசார், பத்திரிகையாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட பல்வேறு துறையினருக்கு பெரும்பாலான மாநில அரசுகள் ஏராளமான சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள் கொரோனா பாதித்து மரணமடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அசாம் மாநில அரசு, களப்பணியாற்றும் பத்திரிகையாளர்கள், ஊர்க்காவல் படையினர் உட்பட ஊழியர்களுக்கு ₹50 லட்சம் இன்சூரன்ஸ் பாதுகாப்பை வழங்கி உள்ளது.அசாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.