காங்கிரஸ் ஆட்சியில் முன்னணியில் தமிழ்நாடு.. அண்ணாமலை வீடியோ வைரல்..
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தது என்று பாஜகவின் புது வரவான முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை உளறி விட்டது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுகவின் பலவீனங்களைப் பயன்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் கால் பதித்து விட வேண்டுமென பாஜக கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. இதற்காக சினிமா நடிகைகள் உள்பட பல்வேறு துறை பிரபலங்களையும் கட்சியில் சேர்த்து வருகிறது. கவர்ச்சி நடிகை நமீதாவுக்கு செயற்குழு உறுப்பினர் பதவியும் தரப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதே போல், பல குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒரு ரவுடியை கட்சியில் சேர்த்ததும் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கர்நாடகாவில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி, பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, சமீபத்தில் பாஜகவில் சேர்ந்துள்ளார். அவர் டெல்லியில் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது, பாரதீய ஜனதா கட்சி என்று உச்சரிப்பதற்குப் பதிலாக பாரதிராஜா கட்சி என்று தவறுதலாக உச்சரித்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, பாஜக கட்சியினருக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து திரும்பி வந்த அண்ணாமலை கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 1950களில் அண்ணா தலைமையில் திராவிட ஆட்சி வந்தது. அதற்கு முன்னாடி சென்னை மாகாணம் ஒடிசா வரை இருந்தது. மகாராஷ்டிரா பார்டர் வரை இருந்தது. அப்ப எல்லாம் வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த 20 வருடமாகத் தமிழ்நாட்டில் வேகமான வளர்ச்சி இல்லாமல் வேற திசையில் போய் விட்டது. திராவிட ஆட்சிக்கு முன்னாடி காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்பத் தமிழ்நாடு முன்னணியில்தானே இருந்தது... என்று அவர் காங்கிரஸ் ஆட்சியைப் புகழும் வகையில் பேசினார்.
இதையடுத்து, அவரை பின்னால் நின்றிருந்த பாஜக நிர்வாகிகள், அவரது பேட்டியைப் பாதியில் நிறுத்தி அவரை அறைக்குள் அழைத்துச் சென்று விட்டனர். இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப் உள்பட சமூக ஊடகங்களில் வரலாகப் பரவி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாடு முன்னணியில் இருந்ததாக அண்ணாமலை பாராட்டினார் என்ற தலைப்புடன் இந்த வீடியோ பகிரப்படுவதால், பாஜகவினருக்கு மீண்டும் ஒரு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. இந்த ஐ.பி.எஸ் அதிகாரி நம்ம கட்சிக்கு ஆள் சேர்க்கற மாதிரி தெரியவில்லை... என்று பழம்பெரும் பாஜக நிர்வாகிகள் தங்களுக்குள் கிண்டலடித்துக் கொள்கிறார்கள்.