முதல் பந்து நோபால், முதல் ஓவரில் 17 ரன்கள் இப்போது 600 விக்கெட்டுகள்
2003ம் ஆண்டு, மே 22ம்தேதி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சைத் தொடங்க மேத்யூ ஹொகாடினுடன் 21 வயதே ஆன ஒரு இளம் பந்து வீச்சாளருக்கு கேப்டன் நாசர் உசேன் வாய்ப்பு கொடுக்கிறார். அவர் வீசிய முதல் பந்தே நோபால் ஆக மாறியது. அந்த ஓவரில் மட்டும் அவர் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு பந்து வீச்சாளருக்கு இதைவிட மோசமான அனுபவம் வேறு என்ன வேண்டும்? ஆனாலும் அந்த அறிமுக பந்துவீச்சாளர் மனம் தளரவில்லை. அந்த டெஸ்ட் போட்டியில் 27வது ஓவரை வீசிய அந்த இளம் பவுலரின் ஒரு பந்து ஜிம்பாப்வேயின் மார்க் வெர்மலனின் ஆஃப் ஸ்டம்பை பதம் பார்த்தது.
இதன்பிறகு விஸ்வரூபம் எடுத்த அந்த பவுலர், அந்தப் போட்டியில் மொத்தம் 75 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையையும் அவர் படைத்தார். அப்போது கமெண்டரி பாக்சில் இருந்த ஒரு கமண்டேட்டர், ' எ ஸ்டார் இன் மேக்கிங் என்று கூறினார். அவர் தான் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன். இதன் பின்னர் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வரும் எல்லா அணி பேட்ஸ்மேன்களுக்கும் ஜேம்ஸ் மைக்கேல் ஆண்டர்சன் என்ற இந்த ஜிம்மி ஆண்டர்சன் ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.
இங்கிலாந்தின் முன்னாள் அதிரடி வேகப்பந்து வீச்சாளர்களான பாப் வில்ஸ் மற்றும் இயான் போத்தமுக்கு அடுத்தபடியாக ஜேம்ஸ் ஆண்டர்சன் மிகச் சிறப்பாகப் பந்து வீசி வருகிறார். இதனால் தான் தன்னுடைய 38வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவர் 600 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார். உலகிலேயே 600 விக்கெட்டுகளை எடுக்கும் 4வது பந்துவீச்சாளர் என்ற பெருமையும், முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.