கொரோனாவுடன் வாழ்க்கை: கருத்தில் கொள்ளவேண்டியவை எவை?
கொரோனாவுக்கான பொது முடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. தொழில் மற்றும் வணிகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, தனி மனிதன் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வீட்டை விட்டு வெளியே வரவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்குப் பல பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். வெளியே சாப்பிடுவதை மட்டும் தவிர்ப்பது, வேலையுடன் உடற்பயிற்சியையும் தவறாமல் செய்வது அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மட்டுமே நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
நோயெதிர்ப்பு ஆற்றல்
உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகப்படுத்தினால் கிருமிகள் நம்மைத் தாக்காமல் தடுக்கலாம். ஒரே நாளில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து விடாது. நீண்ட காலம் அதற்கான முறைகளைத் தவறவிடாமல் முயற்சித்தால் நிச்சயம் நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் உயரும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டியவை:
சமைக்கக்கூடியவை
வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் முடிந்து அலுவலகம் செல்ல நேரிட்டாலும் எவற்றைச் சமைத்துச் சாப்பிட முடியும் என்று திட்டமிட வேண்டும். புரதம், கார்போஹைடிரேடு, கொழுப்பு ஆகியவை அடங்கிய சரிவிகித உணவுப் பொருள்களைச் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு பருவகாலத்திலும் கிடைக்கும் பழங்கள், கீரைகள், காய்கறிகள் ஆகியவற்றைச் சாப்பிடவேண்டும். எளிதாக எவை கிடைக்குமோ அவற்றைக் கொண்டு மட்டுமே உணவு முறையைத் திட்டமிடவேண்டும். அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டாலும் வாங்கக்கூடியவற்றைக் கொண்டே உணவு ஒழுங்கை திட்டமிடுங்கள். எளிய உணவைத் திட்டமிட்டால் தவறாமல் சாப்பிட முடியும். ஆடம்பரமான உணவுகளை அலுவலகம் போகும் நாள்களில் சமைக்க இயலாது. ஆகவே,அவற்றை மட்டும் தவிர்த்துவிடலாம்.
அளவிடக்கூடியவை
அளவிடக்கூடிய இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டும். இவ்வளவு காலத்தில் இவ்வளவு எடை குறைய வேண்டும்; கூட வேண்டும்; இவ்வளவு காலத்தில் இந்தக் குறிப்பிட்ட உடற்பயிற்சியின் உதவியால் உடலின் ஆற்றலை இவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பது போன்ற அளவிடக்கூடிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இதுவரை எட்டியவை; இன்னும் அடையவேண்டியவை என்று பிரித்தறிய முடியும். எளிய உணவுகளின் வாயிலாக இவற்றை அடைவதே ஏற்றது.
அடையக்கூடியவை
கொரோனா பொது முடக்கம், பொருளாதார ரீதியாக அனைவரையுமே முடக்கிப் போட்டுள்ளது. உணவுக்காக நாம் எவ்வளவு குறைவாகச் செலவிட முடியுமோ அவ்வளவு குறைவாகத் திட்டமிட வேண்டும். ஊட்டச்சத்து அவசியம்தான். ஆனால், விலையுயர்ந்தவற்றை வாங்கி சாப்பிட வேண்டும் என்பது பொருளல்ல. நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்ட எளிய உணவுப் பொருள்களை அடையாளம் காண வேண்டும். நம் சமையலறையை ஒரு மருந்தகமாக எண்ணிக்கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மஞ்சள், மிளகு, ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருள்களை எப்போதும் சமையலறையில் வைத்துக்கொண்டு கூடிய மட்டும் அவற்றைச் சேர்க்கக்கூடிய உணவுகளைச் சமைக்கவேண்டும். இவை உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.
எட்டக்கூடியவை
இலக்கு என்பது எட்டக்கூடியதாக இருக்கவேண்டும். இலக்கை நோக்கி நாம் உழைப்பது நல்லது. ஆனால், எட்ட இயலாத இலக்குகளை நிர்ணயித்தால் உழைப்பு விரயமாகும். பொது முடக்கம் முடிந்து அலுவலகம் செல்வதற்கு அல்லது தொழில் நிமித்தமாக வெளியில் செல்வதற்குத் தொடங்கினாலும் எவற்றையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைக் கொண்டே இலக்குகளைத் தீர்மானிக்கவேண்டும். உதாரணமாக, ஒரே மாதத்தில் பத்து கிலோ எடை குறையவேண்டும் என்பது எட்டக்கூடிய இலக்கு அல்ல. மாறாக, மாதத்திற்கு இரண்டு கிலோ என்பது போன்ற இலக்குகளை நிர்ணயிக்கலாம்.
செய்யக்கூடியவை
இத்தனை மாதங்கள் வீட்டில் இருக்கும்போது கிடைத்த நேரம், அலுவலகம் செல்ல ஆரம்பித்தால் கிடைக்காது. ஆகவே, தினமும் வெளியே சென்று வந்தாலும் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை மட்டும் திட்டமிடுங்கள். முதலில் திட்டமிட்டு ஆரம்பித்தவற்றை அலுவலகம் செல்ல ஆரம்பித்ததும் விட்டுவிட்டால் பலனிருக்காது. அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி அல்லது யோகாசனம் இவற்றைச் செய்தல், நல்ல ஊட்டச்சத்துகள் கொண்ட காலையுணவு ஆகியவை ஒரு நாளை நன்றாக ஆரம்பிக்க உதவும்.
இது போன்ற ஆரோக்கியமான பழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்; தேவையற்ற பதற்றம், பயம் ஆகியவற்றைத் தவிர்க்க முடியும்.