ஒடிடிக்கு சூரரைப்போற்று படம் விற்ற லாபத்தில் ரூ 5 கோடி பங்களிக்கும் சூர்யா.. ஒன்றரை கோடி காசோலை வழங்கினார்..
நடிகர் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். கொரோனா லாக்டவுனால் தியேட்டர்கள் மூடியிருந்தாலும், தடைக்காலம் முடிந்தது தியேட்டரில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தியேட்டர்கள் திறப்பதாகத் தெரியவில்லை.பொறுத்துப் பார்த்த சூர்யா சென்ற விநாயகர் சதுர்த்தியன்று சூரரைப் போற்று படம் ஒடிடி தளத்தில் வரும் அக்டோபர் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார், அதேசமயம் தனது அறிவிப்பில் சூரரைப் போற்று படத்தின் விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் ரூ 5 கோடி திரைத் துறையில் உள்ள சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவித்தார். இது ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சூர்யா 5 கோடி பகிர்ந்தளிப்பதாக அறிவித்ததன் முதல் கட்டமாக இன்று திரையுலக சங்கங்களுக்கு ஒன்றரை கோடியை பகிர்ந்தளித்தார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு (பெப்ஸி) ரூ 80 லட்சம், இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ. 20 லட்சம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கு ரூ 30 லட்சம் மற்றும் நடிகர் சங்கத்திற்கு ரூ 20 லட்சம் வழங்கப்பட்டது.நடிகர் மற்றும் சூர்யாவின் தந்தை சிவகுமார் மற்றும் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் இயக்குனர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் பாரதிராஜாவின் திரைப்பட நிறுவனத்தில் இந்த காசோலைகளைத் திரைப்பட அமைப்புகளுக்கு வழங்கினர்.
இயக்குனர் பாரதி ராஜா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு மற்றும் சுரேஷ் காமாட்சி, நடிகர் நாசர், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வ மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக ஒடிடியில் படம் ரிலீஸ் செய்யும் சூர்யா முடிவுக்கு தியேட்டர் அதிபர்கள், டைரக்டர் ஹரி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹரி கூறும்போது. நம்மை வளர்த்துவிட்டது தியேட்டர்கள். அதனை விடுத்து ஒடிடியில் படம் வெளியிடுவது முறை அல்ல. உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். ஆனால் இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சூர்யாவின் முடிவைப் பாராட்டி இருந்தார். இருக்கும் படத்தை ரிலீஸ் செய்தால் தான் அடுத்த திட்டத்தை தொடங்க முடியும் என்றார்.