ராஜினாமா முடிவை அறிவித்தார் ஜப்பான் பிரதமர்
ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ ஆபே கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நுரையீரல் நோய் காரணமாக அவதிப்பட்டு வரும் இவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் முழுமையாகக் குணமடையவில்லை. இதையடுத்து ஆபே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று டோக்கியோவில் பிரதமர் ஷின்சோ ஆபே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ஒரு பிரதமர் என்ற நிலையில் தற்போதைக்கு என்னுடைய பணியைத் தொடர முடியாது எனக் கருதுகிறேன். எனவே பிரதமர் பதவியை நான் ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளேன். பதவிக்காலம் முடிவடைய இன்னும் எனக்கு 1 வருடம் மீதம் இருக்கிறது.கொரோனா நோய் பரவி வரும் இந்த மோசமான கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக நான் ஜப்பான் மக்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனியும் நம் நாட்டுக்காக ஏராளமான காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது என்று கூறினார்.
ஆளும் கட்சியான லிபரல் குடியரசு கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை ஆபேவே பிரதமராக நீடிப்பார் எனக் கருதப்படுகிறது. ஜப்பானில் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற பெருமை இவருக்கு உள்ளது. 2006ம் ஆண்டில் தான் முதன் முதலாக ஷின்சோ ஆபே பிரதமராகப் பொறுப்பேற்றார். 1 வருடத்திற்குப் பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இவர் பதவியை விட்டு விலகினார். பின்னர் 2012ல் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு டிசம்பர் முதல் இவர் ஜப்பான் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார். 2017ல் நடந்த தேர்தலிலும் இவரது கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து 4வது முறையாக ஆபே மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்தார்.