தலைவலி முதல் குழந்தை பிறப்பு வரை உதவும் அகத்தி
மலேசியா மற்றும் வட அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது அகத்தி என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தற்போது இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையில் வளர்க்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் செஸ்பானியா கிராண்டிஃப்ளோரா ஆகும். அகத்திக் கீரைக்கு இரத்த நாளங்களுக்குள் இரத்தம் உறைதலைத் தடுக்கும் தன்மை உண்டு. வயிற்றுப் போக்கினை குணப்படுத்தும். அகத்தியிலை சாறு, மூச்சுக்குழல் அழற்சி, இருமல், வாந்தி, குடற்புண் காயங்கள் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்தும். உலர்ந்த இலையைக் கொண்டு 'டீ' தயாரித்து அருந்தலாம்.
ஆரோக்கியமான இருதயம்
வைட்டமின் 'சி' சத்து அடங்கிய பொருள்களைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது இருதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும். ஒரு கிண்ணம் அகத்திக் கீரையில் 14.6 மில்லி கிராம் வைட்டமின் 'சி' சத்து கிடைக்கும். இரத்தம் செல்லும் தமனிகள் கடினதன்மையடையாமல் காக்கும் பண்பு வைட்டமின் 'சி'க்கு உள்ளது. இவ்வாறு தமனிகளுக்கு நெகிழும் தன்மை அளிக்கிறது. கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) மூலம் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. வைட்டமின் 'சி' குறைபாட்டினால் வரக்கூடிய மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட ஆபத்தான உடல் நல கேடுகள் வராமல் தடுக்கிறது.
கரு வளர்ச்சி
அகத்தியில் ஃபோலேட் சத்து உள்ளது. இது கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆகவே, கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட ஏற்றது. கருவுறுவதற்கு முன்பு ஒரு மாதத்திலிருந்து கருவுற்ற ஆரம்பக் காலம் வரைக்கும் மிகவும் முக்கியமான சத்து ஃபோலேட். ஃபோலேட் குறைவினால் கருவில் வளரும் குழந்தைக்குக் குறைபாடு நேரலாம். சில வேளைகளில் கருச்சிதைவு ஏற்படலாம். ஃபோலேட் சத்து இந்த ஆபத்தை நீக்கி, கரு நன்றாக வளர உதவுகிறது. அகத்திக் கீரை சாப்பிடுவதன் மூலம் இந்த ஆபத்து நேரும் வாய்ப்பு பாதியாகக் குறைகிறது.
சரும ஆரோக்கியம்
வெளிறிய சருமம் மற்றும் கரு வளையங்கள் ஆகியவை இரத்த சோகையின் அறிகுறிகள். இரும்புச் சத்து குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இரும்புச் சத்துக் குறைபாட்டால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைகிறது. இரத்த சிவப்பு அணுக்கள் குறைகின்றன. சருமத்திற்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் சருமம் வெளிறிக் காணப்படுகிறது. போதுமான அளவு இரும்புச் சத்து உள்ள உணவுப் பொருள்களைச் சாப்பிடுவது சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் அகத்தியில் இரும்புச் சத்து அதிகமாகக் காணப்படுவதால் சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது.
எய்ட்ஸ்க்கு எதிரான செயல்பாடு
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி நன்றாகச் செயல்படுவதற்கு செலினியம் சத்து அவசியம். எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி போன்ற வைரஸ் கிருமிகள் வளருவதைத் தடுப்பதில் செலினியத்திற்கு முக்கிய பங்கு உண்டு. ஹெச்ஐவி பாதித்த நோயாளிகளுக்கு செலினியம் அதிக பயன் அளிப்பதாகக் கூறப்படுகிறது. எய்ட்ஸ் நோயின் தீவிரத்தை இது குறைக்கிறது. செலினியத்தை பெற்றுக்கொள்ளச் சிறந்த வழி அகத்திக் கீரை சாப்பிடுவதாகும்.
ஒற்றைத் தலைவலி
ரிபோஃபிளேவின் என்ற சத்து குறைவாக இருப்பவர்களுக்குத் தொடர்ச்சியாகத் தலைவலி ஏற்படலாம். ஒற்றைத் தலைவலி பாதிப்புக்கும் அதுவே காரணமாகிறது. ரிபோஃபிளேவின் சேர்த்துக்கொள்பவர்களுக்குத் தலைவலி தாக்குதல் குறைகிறது. அகத்திக் கீரையில் ரிபோஃப்ளேவின் அதிகம் காணப்படுகிறது.
பாலியல் பலவீனம்
அகத்திக் கீரையில் பாஸ்பரஸ் சத்து காணப்படுகிறது. ஆகவே இது பொதுவான பலவீனத்தையும், அசதியையும் மட்டுமல்ல, பாலியல் பலவீனத்தையும் நீக்குகிறது. ஆண்மைக் குறைவுக்கும் அகத்தி நல்ல மருந்தாகும். விந்தணுவின் வேகமான இயக்கத்தை இது தூண்டுகிறது.