செய்யாத குற்றத்திற்காக 37 வருடங்கள் தண்டனை அனுபவித்த அப்பாவி மனிதன்...!
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் ராபர்ட் டபோய்சின் (55). இவர் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 1983ல் டாம்பா என்ற இடத்தில் ஒரு இளம்பெண் கடத்தி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் ராபர்ட் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் பணி முடிந்து இளம்பெண் கொல்லப்பட்ட இடத்தின் வழியாக சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து இளம்பெண்ணை கொன்றது ராபர்ட் தான் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் ராபர்ட் நிரபராதி என்றும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட டிஎன்ஏ உள்பட ஆதாரங்களில் உண்மை இல்லை என்றும் கடந்த 2018ல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராபர்ட் குற்றவாளி அல்ல என்று கூறி 37 வருடங்களுக்கு பின்னர் அவரை விடுவித்தது.
புளோரிடா போலிங் கிரீன் சிறையிலிருந்து வெளியே வந்த அவரை வரவேற்பதற்காக ராபார்ட்டின் தாய் மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். அவரை பார்த்ததும் அனைவரும் கட்டிப்பிடித்து கதறி அழுதனர். வாழ்க்கையின் ஒரு நல்ல பகுதியை சிறையில் கழிக்க வேண்டியதில் மிகுந்த வேதனை இருப்பதாக ராபர்ட்கூறினார்.