தமிழகத்தில் கொரோனா பலி 7050 ஆக அதிகரிப்பு.. நோய் பரவல் குறையவில்லை..
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தொடர்ந்து வருகிறது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 7050 ஆக உயர்ந்திருக்கிறது. நோய்ப் பாதிப்பு எண்ணிக்கையும் 4 லட்சத்து 9238 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.28) 5996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 17 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 9238 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
மருத்துவமனைகளிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5732 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 49,682 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 102 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 7050 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52,506 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் தொடர்ந்து தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று 1296 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 31,869 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டில் நேற்று 296 பேருக்கும், காஞ்சிபுரம் 194, திருவள்ளூர் 298 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. செங்கல்பட்டில் இது வரை 25,058 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16,703 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 23,926 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர், தேனி, வேலூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி உள்படப் பல மாவட்டங்களிலும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.